வீசும் தென்றலில் மிதந்துவரும்
எத்தனை இடர்நிறை பாதை பல கடந்திட வேண்டும்
இவன் மனிதன் என்றெல்லோரும் ஏற்குமுன்?
எத்தனை அவலக் கடல்களை வெண்புறா ஏகிக் கடந்திட வேண்டும்
ஏகாந்தமாய் வெண்மணலில் இனிதுறங்கு முன்?
எத்தனை தடவைதான் பீரங்கி எரிமழை பொழியும்
சதா தடை செய்யுமுன்?
இவற்றிற்கான பதில் எனதரிய நண்பனே
வீசும் தென்றலில் மிதந்து வரும்,
வீசும் தென்றலில் மிதந்துவரும் நண்பனே
எத்தனை ஆண்டுகள்தான் ஏரிக்கரை மலை நிலைத்து நீடித்திருக்கும்
இயற்கை அரித்து இரைகடல் சேர்க்குமுன்?
அடக்கி ஒடுக்கப் பட்டு அல்லலுறும் மக்கள்
எத்தனை வருடங்கள்தான் உயிர்வாழ்வர்?
அடக்குமுறை அழிந்து சுதந்திர வாழ்வு துளிர்விடுமுன்?
எத்தனை முறைதான் ஒருவன் சிரசைத்திருப்பிச் சொல்லி
தனக்கேதும் தெரியாதென ஏமாற்றலாம்?
இவற்றிற்கான பதில் எனதரிய நண்பனே
வீசும் தென்றலில் மிதந்து வரும்,
வீசும் தென்றலில் மிதந்துவரும் நண்பனே
எத்தனை முறைதான் ஒருவன் மேனோக்கி பார்க்க வேண்டும்
அவன் வானத்தைக் காணுமுன்?
எத்தனை வருடங்கள்தான் ஒருவன் காத்திருக்க வேண்டும்
மக்களின் அழுகுரல் கேட்குமுன்?
எத்தனை இறப்புகள்தான் ஏற்படவேண்டும்
இறந்தோர்தொகை எண்ணிலடங்காதென இவன் புரிந்து கொள்வதற்கு?
இவற்றிற்கான பதில் எனதரிய நண்பனே
வீசும் தென்றலில் மிதந்து வரும்,
வீசும் தென்றலில் மிதந்துவரும் நண்பனே