Thirukoneswaram – திருக்கோணேஸ்வரம் என்னும் இக்கட்டுரை யாழ்ப்பாணம் கொழும்புத்துறை உறை உயர் சைவச் செட்டியாரும் கொழும்புத்துறை வதிரிபீட மன்றுளாடும் பெருமாள் ஸ்ரீ விநாயகமூர்த்திப் பிள்ளையார் பரிபாலன சபை உப தலைவருமான திரு பொ. சிவப்பிரகாசம் PHI, என்பவரால் பல நூல்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களைக்கொண்டும் கோவிலுக்கு நேரில் சென்று பார்த்தும் தொகுக்கப் பட்டது.
திருச்சிற்றம்பலம்
பண்: புறநீர்மை
தாயினும் நல்ல தலைவரென் றடியார்
தம்மடி போற்றிசைப் பார்கள்
வாயினும் மனத்தும் மருவி நின் றகலா
மாண்பினர் காண்பல வேடர்
நோயிலும் பிணியும் தொழிலர் பால்நீக்கி
நுழைதரு நூலினர் ஞாலம்
கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த
கோணமா மலை யமர்ந்தாரே3 ஆம் திருமுறை – சம்பந்தர் தேவாரம்
புராண வரலாறு
“முன்னர் வீழ்ந்திடு சிகரி காளத்தியாய் மொழிவர்
பின்னர் வீழ்ந்தது திரிசிராமலை என்னும் பிறங்க
லன்ன தரப்பினர் வீழ்ந்தது கோணமாவசல
மின்ன மூன்றைந் தட்சணகைலாச என்றிசைப்பார் ”பிறங்க – சிறுமலை
– செவ்வந்திப் புராணம்
இங்கே தட்சண கைலாசமென்பது சம்பந்தப்பெருமானின் தேவாரத் திருப்பதிகமும், அருணகிரிநாதரின் திருப்புகழும், பெற்ற திருகோணமலையே! உத்தர கைலாசத்தில், ஆதிசேடனுக்கும், வாயு பகவானுக்கும் ஏற்பட்ட பலப்பரீட்சையில் வெள்ளிமையமான திருக்கைலாய மலையை, ஆதிசேடன் என்னும் அரவம், மலை அடியிலிருந்து சுற்றிக் கொண்டுபோய் மலை முடிகளைத் தனது பாணா மகுடங்களினாலே மறைத்துக்கொண்ட நிலையில் வாயுபகவான் புயலாகமாறி, மிகுந்த பலங்கொண்டு, பிரசண்டமாக வீசினான். பயங்கரமான பலப்பரீட்சையால், அண்ட கோளங்கள் அசைந்தன, சப்தசமுத்திரங்களும் வற்றின, அண்ட சராசரங்கள் யாவும் அச்சம் அடைந்தன. வாயுபகவானோ சிவபெருமான் எழுந்தருளி இருந்த திரிகோண சிகரத்தையும், அதற்கருகாமையிலிருந்த வேறு இரண்டு சிகரங்களையும் பெயர்த்தெடுத்து, ஒன்றை தொண்டை நாட்டிலுள்ள திருக்காளத்தி திருத்தலத்திலும் (கண்ணப்பர் நாட்டிலும்) மற்றதை சோழநாட்டிலுள்ள திருச்சிராப்பள்ளியிலும், மூன்றாவதான திரிகோண சிகரத்தை ஈழநாட்டிலுள்ள (ஸ்ரீலங்கா) கிழக்குச் சமுத்திரக்கரையிலும் வைத்தான். அன்று தொடக்கம் அவ்விடம் திருகோணமலை, தென்கைலாசம், திரிகூடம், திருமலை, மக்சேசுரம் கோகர்ணம், சுவாமிமலை என்றும் அழைக்கப்படுகிறது.
(https://www.google.co.uk/maps/place/Trincomalee)
திருகோணமலை ஒரு வரலாற்றுச் சுரங்கம்.
அமைவிடம்:
சீராரும் கடல் சூழ்ந்த திருகோணமலையில், மாதுமையாள் சமேத கோணேசப் பெருமான் வீற்றிருக்கிறார்.
சிவபெருமானின் பூர்வீகத் திருத்தலமாகிய கைலாசமலையின் (தீபேத்தியமலை) தென்பகுதியில், சற்றும் பிசகாத நேர்கோட்டில் திருக்கோணேஸ்வரம் அமைந்துள்ளது. கி.மு. 6000 ஆண்டுகட்கு முற்பட்ட சிவசேத்திரம் திருக்கோணேஸ்வரம் ஆகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் (பாவநாசம்), விருட்சம் (கல்லால மரம்) என்னும் நால்வகைச் சிறப்புகளையும் கொண்டது திருக்கோணேஸ்வரம் என்னும் பெருந்தலம். மருதம், முல்லை, நெய்தல், குறிஞ்சி ஆகிய நால்வகை நிலமும் ஒருங்கே அமைந்த இயற்கை எழில் மிக்க பெருநிலப்பரப்பு, திருகோணமலை. திருமலையில் கஸ்தூரி மான்கள் உலாவும். நகரின் கிழக்குக் கரையோரம், கடலலைகள் மலையடிவாரத்தில் சதா வந்து மோதும். மலையின் உச்சியில் அமையப் பெற்றது இந்தத் திருப்பதி. தற்போது பிரட்றிக் கோட்டை அமைந்து இருக்கும் நிலப் பரப்பு முழுவதும், 400 ஆண்டுகளுக்கு முன் பரதேசிகள் சிவசேத்திரத்தை இடிக்கமுன், இந்தப் பெருந்தலத்திற்கு உரியதாக இருந்தது.
(இதிலுள்ள மூன்று கோபுரங்களும்; திரிகூடம், திரிகோணம்; வாயு பகவானால் திருகைலாய மலையிலிருந்து பெயர்த்தெடுக்கப் பட்ட திரிகோண சிகரத்தை குறிக்கும். இப்போ முதலாவது; மேலுள்ள, இடத்திலேயே கோயில் உள்ளது. )
திருமலைத்துறைமுகம் உலகப் புகழ்பெற்ற, ஓர் ஆழமான, பாதுகாப்பான துறைமுகம் (Natural Harbour). தொழிற்சாலைகள் பலவற்றை உள்வாங்கிய பெருநகரம். திருகோணமலை மாவட்டம் எங்கும் சிவலிங்கத் திருமேனி நிறைந்த சிவபூமி, என்று பெருமையாக கூறுவர் பெரியோர். அவ்வாறமைந்துள்ள திரியாய், செம்மீமலை, நந்தநீச்ச்சரம் (வில்கம் விகாரை), கன்னியா வெந்நீரூற்று, சந்திரசோழேச்சரம் (சேருவில), திருமங்கலாய்ச் சிவன், அகத்தியர் தாபனம், கிளிக்குஞ்சு மலை போன்றவற்றை நாம் பறிகொடுக்கும் நிலையிலுள்ளோம். மேலும் திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம், தம்பலகாமம் ஆதி கோணேசர் ஆலயம், கங்குவேலிச் சிவன் கோவில், ஆகியன திருகோணமலையில் உள்ளதால் சிவலிங்கம் செறிந்த சிவபூமியாக திருகோணமலையை கற்றோர் கருதுவர்.
திருமங்கலாய்ச் சிவன் கோவிலை அகத்தியர் தாபனம் என்றுங்கூறுவர். ஆடி அமாவாசை அன்று கரைசைச் சிவன், மகாவலி கங்கைக் கரைக்கு தீர்த்தமாட வருவார். கொட்டியாரப் பகுதி மக்கள் அங்கே கூடுவர். அன்று திருக்கரசைத் தல புராண படனம் இடம் பெறும். கங்கைச் சுருக்கத்தில் மிக இனிமையான பாடல் ஒன்று:-
“அரும்பிய கொங்கைப் பச்சை யணங்கினைப் புனிதனார்தம்
மருங்கமர் பாணி பற்றி மணவினை முடித்தல் காண
இருஞ்சுரர் முனிவர் சித்த ரியங்கர் கந்தருவ ரேனோர்
விரும்பிய கைலை மீது வேண்டின ரீண்டி னாரால்”
கரசைத் தல புராணம்
பொருள்:-
அரும்பிய தனத்தையும், பச்சை நிறத்தையுமுடைய பார்வதி அம்மையாரைப் பரமசிவன் தம்மிடத்தே பொருந்திய திருக் கரங்களால் பற்றி மணவினை முடிக்கும் சிறப்பைக்காணும் பொருட்டு, பெரிய தேவரும், முனிவர்களும், சித்தரும், இயக்கரும், கந்தருவரும், பிறரும் விரும்பிய திருக்கைலாசமலையை வந்து நெருங்கினார்கள்.
கடற்கோள்
முதலாவது கடற்கோள் 12000 வருடங்களுக்கு முன்னும், இரண்டாவது கடற்கோள் 7000 வருடங்களுக்கு முன்னரும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இறுதியாக நிகழ்ந்த கடற்கோளின் போது, ஆயிரம் தூண்களைக் கொண்ட பாரிய சிவாலயம் ஒன்று கடலுள் மூழ்கியதாக ‘இராஜவலிய’ சிங்கள நூல் கூறும். இந்த சேத்திரம் புத்தர் தோன்றுவதற்கு முன்பே, சைவ மக்களால் மிகவும் புனித சிவத்தலமாக போற்றி வணங்கப் பட்டதாக SIR EMASON TENAT என்பார் CEYLON என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
ஆழ்கடல் ஆய்வு
திருக்கோணேஸ்வரத்தைச் சுற்றியுள்ள ஆழ்கடலில், நீரில் மூழ்கி ஆய்வு செய்த டாக்டர் ஆதர் கிளாக், மற்றும் ரெட்ணி ஜோங்கல்ஸ் என்ற ஆழ்கடல் ஆய்வாளர்கள் இருவரும் மிகப் பெரிய பழைமை வாய்ந்த ஆலயம் ஒன்று, கடலின் அடியில் அமிழ்ந்திருப்பதை கண்டறிந்து, அவற்றை விரிவான அறிக்கையாக புகைப்பட ஆதாரங்களுடன் 1956ல் அறியத்தந்தனர். பெருநிறைகொண்ட கண்டாமணி, தீபங்கள், கருங்கற்றூங்கள், ஆலயத் தளபாடங்கள் கடல் அடியில் அமிழ்ந்திருப்பதை கண்டறிந்தனர். திருக்கோணேஸ்வரம் மூன்றாவது கடற்கோளின்போதும் சில பகுதிகள் அமிழப்பட்டிருக்கலாம். பின்பு 1624ல் போர்த்துக்கேயர் ஆலயத்தை முற்றாக இடித்து கடலுக்குள் தள்ளினர். சுழியோடிகள் தாம் கண்டதை, 1958ம் ஆண்டில் ஆய்வு அறிக்கையாக சமர்ப்பித்துள்ளனர். திரு மைக் வில்சன் என்பார் கடலின் அடியில் கண்டு எடுத்த கற்றூண் ஒன்று ஆலயத்தில் சான்றாக வைக்கப் பட்டுள்ளது. அதன் நிழற்படத்தை திருக்கோணேஸ்வரம் என்ற 2014ம் ஆண்டு வெளிவந்த நூலில் காணலாம்.