Thirukoneswaram – திருக்கோணேஸ்வரம்

Thirukoneswaram – திருக்கோணேஸ்வரம்

இராவணன்

Ravanan
இலங்கையை ஆண்ட சிவபக்தன் இராவணின் சிலை –சமுத்திரக் கரையோரத்தில் இராவணன் வெட்டுக் கருகில் உள்ளது.

புலத்திய முனிவரின் பேரன் இராவணன். இராவணன் அந்தணன குலத்தைச் சார்ந்தவன். ஓர் சிவபக்தன். குபேரனுக்குப் பின் இலங்கையை ஆண்டான். தசமுகன். மனைவி மண்டோதரியும் சிவபக்தி நிறைந்தவள். இலங்கேஸ்வரன் நாளாந்தம் கைப்போதும் மலர்தூவி முப்போதும் சிவபெருமானை வழிபட்டு வந்தவன். சம்பந்தப் பெருமானும், தனது திருவாலவாய்த் திருப்பதிகத்தில் ‘இராவணன் மேலதும் நீறு’ எனப் பாடினார். தசக்கிரீவன், தனது தாயார் கைகசி வணங்கும் பொருட்டு, சிவலிங்கத் திருமேனி ஒன்றைப்பெற, திருக்கோணேஸ்வரப் பெருமானிடம் சென்று மனமுருகி வேண்டியும், அது கைகூடாததால் பெருஞ்சினமுற்று  கோணேஸ்வரப் பெருமான் வீற்றிருந்த மலையைப் பெயர்த்தெடுக்கும் நோக்குடன், மலையைத் தன் கூரிய வாளால் வெட்டினான். மலையில் பிளவு உண்டானதோடு வாழும் உடைந்தது. இராவணன் வெட்டு என்ற பகுதியை மலை பிளந்த நிலையில் இன்றும் அங்கே காணலாம்.

Ravanan veddu
இராவணன் வெட்டு

இதை “எறிகடல் புடைதழுவு இலங்கை மன்னனை முடிபட வரைபிடை அடர்த்த மூர்த்தி” என்கிறார் ஞானசம்பந்தர். திருக்கோணேஸ்வரத்தில் இராவணன் வெட்டுக்கருகில் சமுத்திரக் கரையோரத்தில் இலங்கேஸ்வரனின் தத்ரூபமான சிலையை அழகே உருவாகச் செதுக்கி உள்ளான் சிற்பி. சிவபெருமானை கூப்பிய கரங்களால் வணங்குகிறான் இலங்கேஸ்வரன். சமுத்திரத்தின்மேல் பொருத்தமான பீடத்தில், வீணையுடன் சாமகானம் பாடிய நிலையில், கருங்கற்பாறைக் கருகில் இராவணனைக் காணலாம்.

சம்பந்தர் பாடிய திருத்தலம்

திருக்கோணேஸ்வரம் என்னும் சிவசேத்திரம் புனிதமடைய, கி.பி. 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த சமயகுரவர்களில் ஒருவராகிய திருஞான சம்பந்தப் பெருமான் இராமேஸ்வர தீர்த்தக் கரையில் இருந்து தேவாரத் திருப்பதிகம் தித்திக்கப் பாடியதும் ஒரு முக்கிய காரணம் ஆகும். பத்துப் பாடல்கள் கிடைக்கப் பெற்றதும் நாம் செய்த பெருந்தவமே! சீர்காழிச் செம்மல் பாடிய பாடல் பதினொன்று. ஒரு பாடல் கிடைக்கவில்லை. சம்பந்தர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த அப்பர் பெருமான், 9ம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரர், பட்டினத்தடிகள், மற்றும் சேக்கிழார் பெருமான் போன்ற அருளாளர்கள் அருளிய பாடல்களால், திருக்கோணேஸ்வரம் வைப்புத் தலமாக இடம் பெறுகிறது. பதிகம் பெறாத தலம், பிற தலத்துப் திருப்பதிகங்களில் இடம் பெறும்போது, அவை வைப்புத்தலமாக மாறுகின்றன. கி.பி. 15ம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாத சுவாமிகள் பாடிய 15000 திருப்புகழில், இரண்டு பாடல்கள் திருக்கோணேஸ்வர தலத்தையும் அதன் பிரமாண்டமான கோபுரங்களைப் பற்றியும் புகழ்ந்துள்ளது.

தேரடிச் சிந்து

“சீராரும் கடல் சூழ்ந்த திருகோணமலையினிலே
கோணேசர் தேரில் வருகின்றார் – திருக்
கோணேசர் தேரில் வருகின்றார்
மேளமும் நாதமும் சேர்ந்து இசைத்திட
மேலவர் ஞானியர் வாழ்த்தி வணங்கிட “

(சீராரும்)

பல்லவர்கள்

7ம் நூற்றாண்டில் தமிழகத்தை ஆண்ட பல்லவர்கள், பழைய செங்கற் கோயில்களையெல்லாம் கருங்கற் கோயில்களாக மாற்றினர். இக்காலப் பகுதியில்தான் இலங்கை அரசாட்சியை ஏற்ற நரசிம்மவர்மன் மண்ணாய், விண்ணாய், எங்கும் வியாபகமாய் ஒளிர்ந்தருளிய தென்கைலாச பதிக்கு, அதாவது மாதுமையாள் சமேத கோணேசப் பெருமானுக்கு, கற்கோவில் எடுக்க முடிந்தது. திருக்கோணேஸ்வரத்தில் பல்லவ பாணியில், திராவிடச் சிற்ப முறையில் கற்றூண்களையும், சிலைகளையும் உருவாக்கிச் சேர்த்துக் கட்டும் முறை அலாதியானது. ஒவ்வொரு தூணையும் சிங்கம் தலையில் சுமப்பதுபோல் செதுக்கப் பட்டிருக்கும். ஆதிமூலம் சிறந்த வேலைப்பாடு நிறைந்த விமானமாகும். முற்பகுதி 1000 கால் மண்டபம், ஒரு பக்கம் 500 கற்றூண்கள், மறுபக்கம் 500 கற்றூண்கள். தூணின் தலையில் தீபம் ஆக 1000 தீபங்கள் எரிந்தன. இத்தூண்கள் சதுரக் கற்களாக செதுக்கப்பட்டவை. 1300 வருடங்களுக்கு முன் அமைந்த தொன்மையும், வண்மையும் வாய்ந்த சிவசேத்திரத்தை பரதேசிகளான பறங்கியர் இடித்துக் கடலில் தள்ளினர்.

Pallavargal
போர்த்துக்கேயர் சிவசேத்திரத்தை இடித்தழித்தல்

இடித்த கற்களைக்கொண்டு பிறட்டிறிக் கோட்டையை அமைத்தனர். கோட்டையைக் கட்டும்போது, கோட்டை வாயிலில் அமைந்த கற்றூண் ஒன்று பல்லவ காலத்து என்பதை, சதுரக் கல்லாய் இருப்பதால் நாம் ஆய்ந்தறிந்து கொள்ள முடிகிறது. மேலும் ஒரு கற்றூண் சுவாமி மலையில் உள்ளது. இத்தூணில் வருடா வருடம் கார்த்திகைத் தீபம் ஏற்றப் படுகிறது.

Sathura Kanru
சதுரக் கற்றூண் (7ம் நூற்றாண்டு பல்லவ காலத்தையது) கண்டெடுக்கப்பட்டு சுவாமி மலையில் நிறுவப்பெற்றது. இதன் மேல் வருடந்தோறும் கார்த்திகைத்தீபம் ஏற்றப் படுகிறது.

ஆயிரம் இறாத்தல் நிறையுடைய பல்லவர் காலத்துத் தொன்மைவாய்ந்த சிவலிங்கத் திருமேனி ஒன்று, ஆவுடையாருடன் கோவில் வளாகத்தில் கண்டறிந்து மிக்க மகிழ்ச்சியுடன் சைவ மக்கள் 1963ல் முறையாக பயபக்தியுடன் பிரதிஷ்டை செய்து மகிழ்ந்தனர். 1200 யார் நீளமும், 80 அடி அகலமும் கொண்ட விசாலமான ஆலயமாக பல்லவர்கள் அமைத்தார்கள். சிற்ப வேலைப்பாடு மிகுந்த விமானமும், மிக உயர்ந்த இராஜ கோபுரத்தையும் பல்லவர்கள் அமைத்து, அதனில் மனநிறைவு கண்டனர். கோபுரத்தின் உச்சியில் பொன்னாலான கலசங்களைப் பொருத்தினர். 5-6 மைல்களுக்கு அப்பால் கடலில் வரும் கடற்கலங்களை, இந்தப் பொற்கலசங்கள் கவர்ந்தன. காலைவேளையில் கதிரவனின் கதிர்கள் இப்பொற்கலசங்களில் பட்டுப் பிரகாசித்தன. திருக்கோணேஸ்வரத்தில் பல்லவர்கள் மாத்திரமல்ல, சோழர்களும், பாண்டியரும் பல திருப் பணிகள் மேற்கொண்டதை, கோணேசர் கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது. பிறட்டிறிக் கோட்டையில் வைத்துக் கட்டிய கற்றூண் ஒன்றில், பாண்டியரின் இணைக்கயல் மீன் இலச்சினை பொறித்து இருப்பதால் பாண்டியரும் திருப்பணி செய்ததை அறிய முடிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.