Thirukoneswaram – திருக்கோணேஸ்வரம்

Thirukoneswaram – திருக்கோணேஸ்வரம்

குளக்கோட்டன்

சிறப்பு மிகுந்த மனுநீதி கண்ட சோழ பரம்பரையில் வந்துதித்த, வாராமதேவன் என்னும் மன்னன், தெட்சணகைலாச புராணத்தைக் கற்றதனால், திருக்கோணேஸ்வரத்தின் மகிமையை அறிந்து, இந்த சிவசேத்திரத்தை தரிசிக்கும் நோக்குடன் சோழ நாட்டிலிருந்து, மரக்கலம் மூலம், சோலைகள் சூழ்ந்த திருக்கோணேஸ்வர சமுத்திரக் கரையில் வந்திறங்கினான். தாமதமின்றி பாவநாசச் சுனையில் மூழ்கி, ஆசாரமாக, திருக்கோவிலை அடைந்து, ஆனந்த அருவி சொரிய, மாதுமையாள் சமேத கோண நாதரை நிலமுற வீழ்ந்து வணங்கினான். பலகாலம் கோணேஸ்வரத்தில் தங்கியிருந்து இந்த சிவசேத்திரத்திற்கு திருப்பணி செய்யும் பேரவா உந்தப் பெற்றான். தனது நாடு திரும்பி சோழகங்கண் என்னும் இயற்பெயரையுடைய, தன் மகனான குளக்கோட்டனை திருக்கோணேஸ்வரத்திற்கு அனுப்பி வைத்தான். கி.பி. 1223ல் திருமலைக்கு வந்த குளக்கோட்ட மன்னன், இந்தச் சிவசேத்திரத்தின் சீரையும் சிறப்பையும், கோபுரங்களையும் மதில்களையும்,  மண்டபங்களையும் கண்டு மனமிக மகிழ்ந்தான்.

தனது தந்தையான வாராமதேவன் இந்தச் சிவசேத்திரத்திற்கு வந்தபோது வைத்துச் சென்ற திரவியங்களைப் பொறுப்பேற்று,  சாதிக் கருங்கற்களைத் தருவித்து, முக்கோணமாக ஒரு சபையை உருவாக்கினான். கருவறை, அர்த்த மண்டபம், வாத்திய மண்டபம் முதலியவற்றை அழகுற அமைத்து, ஐந்து வீதிகளையும் திருத்தி, நாலா பக்கமும் கோபுரங்களை கட்டி முடித்து, மங்கள வாத்தியங்கள் முழங்க, திருக்குட முழுக்கை நிறைவு செய்தான், குளக்கோட்ட மன்னன். சோழநாட்டிலிருந்து செம்பூச் சம்பா, இந்த சிவசேத்திரத்திற்கு அமுது படைக்க வந்துகொண்டிருந்தது.  அதனை அமுதாக்கி, கறி அமுது பாகம் பண்ணி கோண முதல்வருக்கு படைத்து மகிழ்ந்தான் மன்னன்.

பாரிய திருப்பணிகள் யாவும் நிறைவு எய்தியதும், ஆலயத்தைப் பராமரிப்பதற்கு நிரந்தர வருவாய் ஏற்படுத்த மன்னன் சிந்திக்கலானான். சோழநாட்டிலிருந்து நல் ஒழுக்கம், ஆசாரம் நிறைந்த நற்குடிகளைத் தேர்ந்தெடுத்து மரக்கலத்தில் ஏற்றி வந்தான். வந்தவர்களை ஆலய நிர்மாணம், நிர்வாகம் போன்ற பணிகளில் அமர்த்தி, விளைநிலங்களை மானியமாக வழங்கி, குடி அமர்த்தியதை கோணேசர் கல்வெட்டு கூறுகிறது.

கந்தளாய்க்குளம்

குளக்கோட்ட மன்னன் கந்தளாய்க் குளத்தை உருவாக்கியதால், மறுத்த நிலம் செழித்து திருகோணமலை பசுமையும், செழுமையும் பெற்றதோடு, நெற்செய்கையும் விரிவாக்கம் பெற்றது. குளக்கோட்ட மன்னன் சிவசேத்திரத்தின் பராமரிப்புக்காக 2700 அவண நெல்விதைப்புத்தறையை உருவாக்கி, குன்றாத நீர்ப்பாசனத்திற்காக மேலும் அல்லைக்குளம், வெண்டரசன் குளம், ஆகியவற்றில், ஆற்று நீரும், வேற்று நீரும், ஊற்று நீரும் குளத்தில் நிறைந்திருக்க வழி செய்தான். கந்தளாய்க் குளக்கட்டின் அருகில் குளக்கோட்ட மன்னன் தாபித்த பிள்ளையார் இன்றும் அருள் பாலித்த வண்ணம் உள்ளார்.

 

“பார்தாங்கு கோயிலும் பொன்மண்டபமுங்
கோபுரமும் பரற்குநாட்டி
பேர்தாங்கு மாயனுக்கு மலங்கார
வாலய மொன்றியற்றி முற்றும்
கார்தாங்கு திருக்குளமும் பாவநாசச்
சுனையும் கண்டகண்டன்
சீர்தாங்கு குளக்கோட்டனென்னும் சோழகங்கணை
நம் சிந்தையில் வைப்பாம்”

பரற்கு – இறைவனுக்கு              – ஸ்ரீதெட்சண கைலாச புராணம்

கலியப்தம் 512ல் திருக்கோணேஸ்வரத் திருப்பணியைச் செய்து முடித்த குளக்கோட்ட மன்னன், கலியப்தம் 516ல் கந்தளாய்க் குளத்தைக் கட்டினான் என்று கோணேசர் கல்வெட்டுக் கூறுகிறது.

சிவசேத்திரம்

இந்தச் சிவசேத்திரத்தில் நித்திய நைமித்திய பூசைகள், ஆலய ஒழுங்கு முறைகள் தவறாது இடம்பெற, சட்ட திட்டங்களை மிக இறுக்கமாக வரைந்தான் குளக்கோட்டன். ஆலய நிர்வாகம், தொழும்புகள் (இறை தொண்டு) திருமுறை ஓதல் (ஓதுவார்), மலர் கொய்தல், தீபம் ஏற்றல், நெல்லை அரிசியாக்கல், அலகிடல், திருப்பொற்சுண்ணம் இடித்தல், விறகாக்கல், தளிசைத் தட்டு முட்டு விளக்கல், ஆலாத்தி எடுத்தல், மாலைகட்டல், மாதுமை சமேத கோணேசப் பெருமான் வீதிவலம் வரும்போது, நடனம் ஆடுதல் ஆகிய பணிகள் தவறாது இடம்பெற குளக்கோட்டன் ஆணையிட்டான்.

King Kulakkoddan instring temple care takers குளக்கோட்டன் ஆலயப்பணிகள் பற்றி உத்தரவு பிறப்பித்தல்

மங்கள வாத்தியம் வாசிப்போர், கணக்காளர், தீபம் ஏற்றுவோர் அனைவருக்கும் நிலங்கள் அளந்து கொடுபட்டதாக கோணேசர் கல்வெட்டு கூறுகிறது. கோணேசப் பெருமானுக்கு கறி அமுது படைக்க பசுநெய், கற்கண்டுப் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், வள்ளிக் கிழங்கு அவியல், பொரியல், முக்கனி மீது வதை பிழிந்த தேன், பலகாரவகை, பாகிலை, படைத்தான் குளக்கோட்ட மன்னன். திருக்கோணேஸ்வரத்தில் பதினோராயிரந் தீபங்கள் பிரகாசித்தன. இந்தத் தீபங்களை ஏற்ற ஆமணக்கு, தேங்காய் எண்ணெய் வகைகள் பாவனையில் இருந்தன. சிவசேத்திர உட்பிரகாரத்தில் உள்ள தீபங்கள் அனைத்தும், பசு நெய்யில் பிரகாசித்தது.  இந்த எண்ணெய் வகைகள் ஆலய வடகிழக்கில் இருந்த கிணறுகளில் சேமிப்பில் இருந்தன. சிறந்த சந்தனத்தை, புனகுடன் பன்னீர் கலந்து இறைபாவனையில் இருந்தது. நறுமணம் மிகுந்த சாம்பிராணிப் புகை, குங்குலியப் புகையால் சிவசேத்திரம் நறுமணம் வீசியது.

குளக்கோட்ட மன்னனின் மானியத்தை அனுபவித்த குடிகள், பயபக்தியோடு திருக்கோணேஸ்வரத்திற்கு பால், தயிர், நெய், மல்லிகை, முல்லை, தாமரை வகைகள், தாமரைத் திரி (தீபம் ஏற்ற), எண்ணெய் வகைகளை, அனுப்பி வைத்தனர். சிவசேத்திரமான திருகோணமலையில் குளக்கோட்டனின் ஆன்மீக சாம்ராச்சியம் ஒன்று நடைபெற்று வந்தது. இந்தச் சிவசேத்திரத்துடன் இணைந்திருப்பது குளக்கோட்ட மன்னனின் திருநாமம். திருக்கோணேஸ்வரத்தின் திருப்பணிகள் அனைத்தையும் நிறைவு செய்து, அதன் வளத்திற்கு தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் ஈந்து, பயபக்தியோடு இந்த சிவசேத்திரத்தை பராமரித்து வந்த மன்னன், தனக்குப் பின்னும், தனது திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தவறு நேர்ந்தால் வரும் விளைவை கோணேசர் கல்வெட்டில் காணமுடியும். மன்னனின் பேரவாவை கீழ்வரும் சிறந்த கவிதையில் காணமுடியும்.

மாறாத புனல் பாயும் திருக்குளமும் வயல் வெளியும் வருந்திச் செய்தே
வீறாக என்மரபோற்கு ஈயாமல் கோணமலை விமலற்கு ஈந்தேன்
பேறான பெரியோரே இதற்கழிவு நினைத்தவர்கள் பெட்டி நீங்கி
நீறாகப் போவர் இது நிச்சயம், நிச்சயம் கோண நிமலர் ஆணை

புனல் பாயும் – நீர்ப்பாசனம்                       — கோணேசர் கல்வெட்டு

மேற்கூறிய பாடல் குளக்கோட்ட மன்னனின் தணியாத தாகமாகும். மேலே சொல்லிய பாடல் ஆலயங்களில் தவறு செய்யும் அறங்காவலர் அனைவருக்கும் பொருந்தும். கோணேசர் கல்வெட்டு ஒரு தொகுப்பு நூல். பல்லவ, சோழ, பாண்டியர்கள் தாம் ஆட்சி செய்த நாடுகளில் உள்ள சிவசேத்திரங்கட்கு  மனமாரத் திருப்பணி செய்தும், மானியங்களை வழங்கத் தவறவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.