Naguleswaran

Thirukoneswaram – திருக்கோணேஸ்வரம்

Thirukoneswaram – திருக்கோணேஸ்வரம் என்னும் இக்கட்டுரை யாழ்ப்பாணம் கொழும்புத்துறை உறை உயர் சைவச் செட்டியாரும் கொழும்புத்துறை வதிரிபீட மன்றுளாடும் பெருமாள் ஸ்ரீ விநாயகமூர்த்திப் பிள்ளையார் பரிபாலன சபை உப தலைவருமான திரு பொ. சிவப்பிரகாசம் PHI, என்பவரால் பல நூல்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களைக்கொண்டும் கோவிலுக்கு நேரில் சென்று பார்த்தும் தொகுக்கப் பட்டது.

Thirukoneswaram
Thirkoneswaram-திருக்கோணேஸ்வரம் (with insets)
திருச்சிற்றம்பலம்

பண்: புறநீர்மை

தாயினும் நல்ல தலைவரென் றடியார்
தம்மடி போற்றிசைப் பார்கள்
வாயினும் மனத்தும் மருவி நின் றகலா
மாண்பினர் காண்பல வேடர்
நோயிலும் பிணியும் தொழிலர் பால்நீக்கி
நுழைதரு நூலினர் ஞாலம்
கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த
கோணமா மலை யமர்ந்தாரே

3 ஆம் திருமுறை                                                – சம்பந்தர் தேவாரம்

புராண வரலாறு

“முன்னர் வீழ்ந்திடு சிகரி காளத்தியாய் மொழிவர்
பின்னர் வீழ்ந்தது திரிசிராமலை என்னும் பிறங்க
லன்ன தரப்பினர் வீழ்ந்தது கோணமாவசல
மின்ன மூன்றைந் தட்சணகைலாச என்றிசைப்பார் ”

பிறங்க – சிறுமலை

– செவ்வந்திப் புராணம்

இங்கே தட்சண கைலாசமென்பது சம்பந்தப்பெருமானின் தேவாரத் திருப்பதிகமும், அருணகிரிநாதரின் திருப்புகழும், பெற்ற திருகோணமலையே! உத்தர கைலாசத்தில், ஆதிசேடனுக்கும், வாயு பகவானுக்கும் ஏற்பட்ட பலப்பரீட்சையில் வெள்ளிமையமான திருக்கைலாய மலையை, ஆதிசேடன் என்னும் அரவம், மலை அடியிலிருந்து சுற்றிக் கொண்டுபோய் மலை முடிகளைத் தனது பாணா மகுடங்களினாலே மறைத்துக்கொண்ட நிலையில் வாயுபகவான் புயலாகமாறி, மிகுந்த பலங்கொண்டு, பிரசண்டமாக வீசினான். பயங்கரமான பலப்பரீட்சையால், அண்ட கோளங்கள் அசைந்தன, சப்தசமுத்திரங்களும் வற்றின, அண்ட சராசரங்கள் யாவும் அச்சம் அடைந்தன. வாயுபகவானோ சிவபெருமான் எழுந்தருளி இருந்த திரிகோண சிகரத்தையும், அதற்கருகாமையிலிருந்த வேறு இரண்டு சிகரங்களையும் பெயர்த்தெடுத்து, ஒன்றை தொண்டை நாட்டிலுள்ள திருக்காளத்தி திருத்தலத்திலும் (கண்ணப்பர் நாட்டிலும்) மற்றதை சோழநாட்டிலுள்ள திருச்சிராப்பள்ளியிலும், மூன்றாவதான திரிகோண சிகரத்தை ஈழநாட்டிலுள்ள (ஸ்ரீலங்கா) கிழக்குச் சமுத்திரக்கரையிலும் வைத்தான். அன்று தொடக்கம் அவ்விடம் திருகோணமலை, தென்கைலாசம், திரிகூடம், திருமலை, மக்சேசுரம் கோகர்ணம், சுவாமிமலை என்றும் அழைக்கப்படுகிறது.

இலங்கை
திருகோணமலை மாவட்டம்

 

 

 

                  (https://www.google.co.uk/maps/place/Trincomalee)

திருகோணமலை ஒரு வரலாற்றுச் சுரங்கம்.

 

அமைவிடம்:

  சீராரும் கடல் சூழ்ந்த திருகோணமலையில், மாதுமையாள் சமேத கோணேசப் பெருமான் வீற்றிருக்கிறார்.

திருக்கோணேஸ்வரம் மூலவரும் மாதுமை உடனுறை கோணேஸ்வரரும்
மாதுமையாள் சமேத கோணநாதர் – எழுந்தருளி, திருக்கோணேஸ்வரம்-

சிவபெருமானின் பூர்வீகத் திருத்தலமாகிய கைலாசமலையின் (தீபேத்தியமலை) தென்பகுதியில், சற்றும் பிசகாத நேர்கோட்டில் திருக்கோணேஸ்வரம் அமைந்துள்ளது. கி.மு. 6000 ஆண்டுகட்கு முற்பட்ட சிவசேத்திரம் திருக்கோணேஸ்வரம் ஆகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் (பாவநாசம்), விருட்சம் (கல்லால மரம்) என்னும் நால்வகைச் சிறப்புகளையும் கொண்டது திருக்கோணேஸ்வரம் என்னும் பெருந்தலம். மருதம், முல்லை, நெய்தல், குறிஞ்சி ஆகிய நால்வகை நிலமும் ஒருங்கே அமைந்த இயற்கை எழில் மிக்க பெருநிலப்பரப்பு, திருகோணமலை. திருமலையில் கஸ்தூரி மான்கள் உலாவும். நகரின் கிழக்குக் கரையோரம், கடலலைகள் மலையடிவாரத்தில் சதா வந்து மோதும். மலையின் உச்சியில் அமையப் பெற்றது இந்தத் திருப்பதி. தற்போது பிரட்றிக் கோட்டை அமைந்து இருக்கும் நிலப் பரப்பு முழுவதும், 400 ஆண்டுகளுக்கு முன் பரதேசிகள் சிவசேத்திரத்தை இடிக்கமுன், இந்தப் பெருந்தலத்திற்கு உரியதாக இருந்தது.

போர்த்துக்கேயர் இடித்தழிக்குமுன்னர் இருந்த ஆலய வளாகம். Thrukoneswaram- campus at start

(இதிலுள்ள மூன்று கோபுரங்களும்; திரிகூடம், திரிகோணம்; வாயு பகவானால் திருகைலாய மலையிலிருந்து பெயர்த்தெடுக்கப் பட்ட திரிகோண சிகரத்தை குறிக்கும். இப்போ முதலாவது; மேலுள்ள, இடத்திலேயே கோயில் உள்ளது. )

திருமலைத்துறைமுகம் உலகப் புகழ்பெற்ற, ஓர் ஆழமான, பாதுகாப்பான துறைமுகம் (Natural Harbour). தொழிற்சாலைகள் பலவற்றை உள்வாங்கிய பெருநகரம். திருகோணமலை மாவட்டம் எங்கும் சிவலிங்கத் திருமேனி நிறைந்த சிவபூமி, என்று பெருமையாக கூறுவர் பெரியோர். அவ்வாறமைந்துள்ள திரியாய், செம்மீமலை, நந்தநீச்ச்சரம் (வில்கம் விகாரை), கன்னியா வெந்நீரூற்று, சந்திரசோழேச்சரம் (சேருவில), திருமங்கலாய்ச் சிவன், அகத்தியர் தாபனம், கிளிக்குஞ்சு மலை போன்றவற்றை நாம் பறிகொடுக்கும் நிலையிலுள்ளோம். மேலும் திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம், தம்பலகாமம் ஆதி கோணேசர் ஆலயம், கங்குவேலிச் சிவன் கோவில், ஆகியன திருகோணமலையில் உள்ளதால் சிவலிங்கம் செறிந்த சிவபூமியாக திருகோணமலையை கற்றோர் கருதுவர்.

திருமங்கலாய்ச் சிவன் கோவிலை அகத்தியர் தாபனம் என்றுங்கூறுவர். ஆடி அமாவாசை அன்று கரைசைச் சிவன், மகாவலி கங்கைக் கரைக்கு தீர்த்தமாட வருவார். கொட்டியாரப் பகுதி மக்கள் அங்கே கூடுவர். அன்று திருக்கரசைத் தல புராண படனம் இடம் பெறும். கங்கைச் சுருக்கத்தில் மிக இனிமையான பாடல் ஒன்று:-

“அரும்பிய கொங்கைப் பச்சை யணங்கினைப் புனிதனார்தம்
மருங்கமர் பாணி பற்றி மணவினை முடித்தல் காண
இருஞ்சுரர் முனிவர் சித்த ரியங்கர் கந்தருவ ரேனோர்
விரும்பிய கைலை மீது வேண்டின ரீண்டி னாரால்”

கரசைத் தல புராணம்

பொருள்:-

      அரும்பிய தனத்தையும், பச்சை நிறத்தையுமுடைய பார்வதி அம்மையாரைப் பரமசிவன் தம்மிடத்தே பொருந்திய திருக் கரங்களால் பற்றி மணவினை முடிக்கும் சிறப்பைக்காணும் பொருட்டு, பெரிய தேவரும், முனிவர்களும், சித்தரும், இயக்கரும், கந்தருவரும், பிறரும் விரும்பிய திருக்கைலாசமலையை வந்து நெருங்கினார்கள்.

கடற்கோள்           

முதலாவது கடற்கோள் 12000 வருடங்களுக்கு முன்னும், இரண்டாவது கடற்கோள் 7000 வருடங்களுக்கு முன்னரும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இறுதியாக நிகழ்ந்த கடற்கோளின் போது, ஆயிரம் தூண்களைக் கொண்ட பாரிய சிவாலயம் ஒன்று கடலுள் மூழ்கியதாக ‘இராஜவலிய’ சிங்கள நூல் கூறும். இந்த சேத்திரம் புத்தர் தோன்றுவதற்கு முன்பே, சைவ மக்களால் மிகவும் புனித சிவத்தலமாக போற்றி வணங்கப் பட்டதாக SIR EMASON TENAT என்பார் CEYLON என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

ஆழ்கடல் ஆய்வு  

திருக்கோணேஸ்வரத்தைச் சுற்றியுள்ள ஆழ்கடலில், நீரில் மூழ்கி ஆய்வு செய்த டாக்டர் ஆதர் கிளாக், மற்றும் ரெட்ணி ஜோங்கல்ஸ் என்ற ஆழ்கடல் ஆய்வாளர்கள் இருவரும் மிகப் பெரிய பழைமை வாய்ந்த ஆலயம் ஒன்று, கடலின் அடியில் அமிழ்ந்திருப்பதை கண்டறிந்து, அவற்றை விரிவான அறிக்கையாக புகைப்பட ஆதாரங்களுடன் 1956ல் அறியத்தந்தனர். பெருநிறைகொண்ட கண்டாமணி, தீபங்கள், கருங்கற்றூங்கள், ஆலயத் தளபாடங்கள் கடல் அடியில் அமிழ்ந்திருப்பதை கண்டறிந்தனர். திருக்கோணேஸ்வரம் மூன்றாவது கடற்கோளின்போதும் சில பகுதிகள் அமிழப்பட்டிருக்கலாம். பின்பு 1624ல் போர்த்துக்கேயர் ஆலயத்தை முற்றாக இடித்து கடலுக்குள் தள்ளினர். சுழியோடிகள் தாம் கண்டதை, 1958ம் ஆண்டில் ஆய்வு அறிக்கையாக சமர்ப்பித்துள்ளனர். திரு மைக் வில்சன் என்பார் கடலின் அடியில் கண்டு எடுத்த கற்றூண் ஒன்று ஆலயத்தில் சான்றாக வைக்கப் பட்டுள்ளது. அதன் நிழற்படத்தை  திருக்கோணேஸ்வரம் என்ற 2014ம் ஆண்டு வெளிவந்த நூலில் காணலாம்.

Thirukoneswaram – திருக்கோணேஸ்வரம்

இராவணன்

இலங்கையை ஆண்ட சிவபக்தன் இராவணின் சிலை –சமுத்திரக் கரையோரத்தில் இராவணன் வெட்டுக் கருகில் உள்ளது.

புலத்திய முனிவரின் பேரன் இராவணன். இராவணன் அந்தணன குலத்தைச் சார்ந்தவன். ஓர் சிவபக்தன். குபேரனுக்குப் பின் இலங்கையை ஆண்டான். தசமுகன். மனைவி மண்டோதரியும் சிவபக்தி நிறைந்தவள். இலங்கேஸ்வரன் நாளாந்தம் கைப்போதும் மலர்தூவி முப்போதும் சிவபெருமானை வழிபட்டு வந்தவன். சம்பந்தப் பெருமானும், தனது திருவாலவாய்த் திருப்பதிகத்தில் ‘இராவணன் மேலதும் நீறு’ எனப் பாடினார். தசக்கிரீவன், தனது தாயார் கைகசி வணங்கும் பொருட்டு, சிவலிங்கத் திருமேனி ஒன்றைப்பெற, திருக்கோணேஸ்வரப் பெருமானிடம் சென்று மனமுருகி வேண்டியும், அது கைகூடாததால் பெருஞ்சினமுற்று  கோணேஸ்வரப் பெருமான் வீற்றிருந்த மலையைப் பெயர்த்தெடுக்கும் நோக்குடன், மலையைத் தன் கூரிய வாளால் வெட்டினான். மலையில் பிளவு உண்டானதோடு வாழும் உடைந்தது. இராவணன் வெட்டு என்ற பகுதியை மலை பிளந்த நிலையில் இன்றும் அங்கே காணலாம்.

இராவணன் வெட்டு

இதை “எறிகடல் புடைதழுவு இலங்கை மன்னனை முடிபட வரைபிடை அடர்த்த மூர்த்தி” என்கிறார் ஞானசம்பந்தர். திருக்கோணேஸ்வரத்தில் இராவணன் வெட்டுக்கருகில் சமுத்திரக் கரையோரத்தில் இலங்கேஸ்வரனின் தத்ரூபமான சிலையை அழகே உருவாகச் செதுக்கி உள்ளான் சிற்பி. சிவபெருமானை கூப்பிய கரங்களால் வணங்குகிறான் இலங்கேஸ்வரன். சமுத்திரத்தின்மேல் பொருத்தமான பீடத்தில், வீணையுடன் சாமகானம் பாடிய நிலையில், கருங்கற்பாறைக் கருகில் இராவணனைக் காணலாம்.

சம்பந்தர் பாடிய திருத்தலம்

திருக்கோணேஸ்வரம் என்னும் சிவசேத்திரம் புனிதமடைய, கி.பி. 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த சமயகுரவர்களில் ஒருவராகிய திருஞான சம்பந்தப் பெருமான் இராமேஸ்வர தீர்த்தக் கரையில் இருந்து தேவாரத் திருப்பதிகம் தித்திக்கப் பாடியதும் ஒரு முக்கிய காரணம் ஆகும். பத்துப் பாடல்கள் கிடைக்கப் பெற்றதும் நாம் செய்த பெருந்தவமே! சீர்காழிச் செம்மல் பாடிய பாடல் பதினொன்று. ஒரு பாடல் கிடைக்கவில்லை. சம்பந்தர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த அப்பர் பெருமான், 9ம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரர், பட்டினத்தடிகள், மற்றும் சேக்கிழார் பெருமான் போன்ற அருளாளர்கள் அருளிய பாடல்களால், திருக்கோணேஸ்வரம் வைப்புத் தலமாக இடம் பெறுகிறது. பதிகம் பெறாத தலம், பிற தலத்துப் திருப்பதிகங்களில் இடம் பெறும்போது, அவை வைப்புத்தலமாக மாறுகின்றன. கி.பி. 15ம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாத சுவாமிகள் பாடிய 15000 திருப்புகழில், இரண்டு பாடல்கள் திருக்கோணேஸ்வர தலத்தையும் அதன் பிரமாண்டமான கோபுரங்களைப் பற்றியும் புகழ்ந்துள்ளது.

தேரடிச் சிந்து

“சீராரும் கடல் சூழ்ந்த திருகோணமலையினிலே
கோணேசர் தேரில் வருகின்றார் – திருக்
கோணேசர் தேரில் வருகின்றார்
மேளமும் நாதமும் சேர்ந்து இசைத்திட
மேலவர் ஞானியர் வாழ்த்தி வணங்கிட “

(சீராரும்)

பல்லவர்கள்

7ம் நூற்றாண்டில் தமிழகத்தை ஆண்ட பல்லவர்கள், பழைய செங்கற் கோயில்களையெல்லாம் கருங்கற் கோயில்களாக மாற்றினர். இக்காலப் பகுதியில்தான் இலங்கை அரசாட்சியை ஏற்ற நரசிம்மவர்மன் மண்ணாய், விண்ணாய், எங்கும் வியாபகமாய் ஒளிர்ந்தருளிய தென்கைலாச பதிக்கு, அதாவது மாதுமையாள் சமேத கோணேசப் பெருமானுக்கு, கற்கோவில் எடுக்க முடிந்தது. திருக்கோணேஸ்வரத்தில் பல்லவ பாணியில், திராவிடச் சிற்ப முறையில் கற்றூண்களையும், சிலைகளையும் உருவாக்கிச் சேர்த்துக் கட்டும் முறை அலாதியானது. ஒவ்வொரு தூணையும் சிங்கம் தலையில் சுமப்பதுபோல் செதுக்கப் பட்டிருக்கும். ஆதிமூலம் சிறந்த வேலைப்பாடு நிறைந்த விமானமாகும். முற்பகுதி 1000 கால் மண்டபம், ஒரு பக்கம் 500 கற்றூண்கள், மறுபக்கம் 500 கற்றூண்கள். தூணின் தலையில் தீபம் ஆக 1000 தீபங்கள் எரிந்தன. இத்தூண்கள் சதுரக் கற்களாக செதுக்கப்பட்டவை. 1300 வருடங்களுக்கு முன் அமைந்த தொன்மையும், வண்மையும் வாய்ந்த சிவசேத்திரத்தை பரதேசிகளான பறங்கியர் இடித்துக் கடலில் தள்ளினர்.

போர்த்துக்கேயர் சிவசேத்திரத்தை இடித்தழித்தல்

இடித்த கற்களைக்கொண்டு பிறட்டிறிக் கோட்டையை அமைத்தனர். கோட்டையைக் கட்டும்போது, கோட்டை வாயிலில் அமைந்த கற்றூண் ஒன்று பல்லவ காலத்து என்பதை, சதுரக் கல்லாய் இருப்பதால் நாம் ஆய்ந்தறிந்து கொள்ள முடிகிறது. மேலும் ஒரு கற்றூண் சுவாமி மலையில் உள்ளது. இத்தூணில் வருடா வருடம் கார்த்திகைத் தீபம் ஏற்றப் படுகிறது.

சதுரக் கற்றூண் (7ம் நூற்றாண்டு பல்லவ காலத்தையது) கண்டெடுக்கப்பட்டு சுவாமி மலையில் நிறுவப்பெற்றது. இதன் மேல் வருடந்தோறும் கார்த்திகைத்தீபம் ஏற்றப் படுகிறது.

ஆயிரம் இறாத்தல் நிறையுடைய பல்லவர் காலத்துத் தொன்மைவாய்ந்த சிவலிங்கத் திருமேனி ஒன்று, ஆவுடையாருடன் கோவில் வளாகத்தில் கண்டறிந்து மிக்க மகிழ்ச்சியுடன் சைவ மக்கள் 1963ல் முறையாக பயபக்தியுடன் பிரதிஷ்டை செய்து மகிழ்ந்தனர். 1200 யார் நீளமும், 80 அடி அகலமும் கொண்ட விசாலமான ஆலயமாக பல்லவர்கள் அமைத்தார்கள். சிற்ப வேலைப்பாடு மிகுந்த விமானமும், மிக உயர்ந்த இராஜ கோபுரத்தையும் பல்லவர்கள் அமைத்து, அதனில் மனநிறைவு கண்டனர். கோபுரத்தின் உச்சியில் பொன்னாலான கலசங்களைப் பொருத்தினர். 5-6 மைல்களுக்கு அப்பால் கடலில் வரும் கடற்கலங்களை, இந்தப் பொற்கலசங்கள் கவர்ந்தன. காலைவேளையில் கதிரவனின் கதிர்கள் இப்பொற்கலசங்களில் பட்டுப் பிரகாசித்தன. திருக்கோணேஸ்வரத்தில் பல்லவர்கள் மாத்திரமல்ல, சோழர்களும், பாண்டியரும் பல திருப் பணிகள் மேற்கொண்டதை, கோணேசர் கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது. பிறட்டிறிக் கோட்டையில் வைத்துக் கட்டிய கற்றூண் ஒன்றில், பாண்டியரின் இணைக்கயல் மீன் இலச்சினை பொறித்து இருப்பதால் பாண்டியரும் திருப்பணி செய்ததை அறிய முடிகிறது.

Thirukoneswaram – திருக்கோணேஸ்வரம்

குளக்கோட்டன்

சிறப்பு மிகுந்த மனுநீதி கண்ட சோழ பரம்பரையில் வந்துதித்த, வாராமதேவன் என்னும் மன்னன், தெட்சணகைலாச புராணத்தைக் கற்றதனால், திருக்கோணேஸ்வரத்தின் மகிமையை அறிந்து, இந்த சிவசேத்திரத்தை தரிசிக்கும் நோக்குடன் சோழ நாட்டிலிருந்து, மரக்கலம் மூலம், சோலைகள் சூழ்ந்த திருக்கோணேஸ்வர சமுத்திரக் கரையில் வந்திறங்கினான். தாமதமின்றி பாவநாசச் சுனையில் மூழ்கி, ஆசாரமாக, திருக்கோவிலை அடைந்து, ஆனந்த அருவி சொரிய, மாதுமையாள் சமேத கோண நாதரை நிலமுற வீழ்ந்து வணங்கினான். பலகாலம் கோணேஸ்வரத்தில் தங்கியிருந்து இந்த சிவசேத்திரத்திற்கு திருப்பணி செய்யும் பேரவா உந்தப் பெற்றான். தனது நாடு திரும்பி சோழகங்கண் என்னும் இயற்பெயரையுடைய, தன் மகனான குளக்கோட்டனை திருக்கோணேஸ்வரத்திற்கு அனுப்பி வைத்தான். கி.பி. 1223ல் திருமலைக்கு வந்த குளக்கோட்ட மன்னன், இந்தச் சிவசேத்திரத்தின் சீரையும் சிறப்பையும், கோபுரங்களையும் மதில்களையும்,  மண்டபங்களையும் கண்டு மனமிக மகிழ்ந்தான்.

தனது தந்தையான வாராமதேவன் இந்தச் சிவசேத்திரத்திற்கு வந்தபோது வைத்துச் சென்ற திரவியங்களைப் பொறுப்பேற்று,  சாதிக் கருங்கற்களைத் தருவித்து, முக்கோணமாக ஒரு சபையை உருவாக்கினான். கருவறை, அர்த்த மண்டபம், வாத்திய மண்டபம் முதலியவற்றை அழகுற அமைத்து, ஐந்து வீதிகளையும் திருத்தி, நாலா பக்கமும் கோபுரங்களை கட்டி முடித்து, மங்கள வாத்தியங்கள் முழங்க, திருக்குட முழுக்கை நிறைவு செய்தான், குளக்கோட்ட மன்னன். சோழநாட்டிலிருந்து செம்பூச் சம்பா, இந்த சிவசேத்திரத்திற்கு அமுது படைக்க வந்துகொண்டிருந்தது.  அதனை அமுதாக்கி, கறி அமுது பாகம் பண்ணி கோண முதல்வருக்கு படைத்து மகிழ்ந்தான் மன்னன்.

பாரிய திருப்பணிகள் யாவும் நிறைவு எய்தியதும், ஆலயத்தைப் பராமரிப்பதற்கு நிரந்தர வருவாய் ஏற்படுத்த மன்னன் சிந்திக்கலானான். சோழநாட்டிலிருந்து நல் ஒழுக்கம், ஆசாரம் நிறைந்த நற்குடிகளைத் தேர்ந்தெடுத்து மரக்கலத்தில் ஏற்றி வந்தான். வந்தவர்களை ஆலய நிர்மாணம், நிர்வாகம் போன்ற பணிகளில் அமர்த்தி, விளைநிலங்களை மானியமாக வழங்கி, குடி அமர்த்தியதை கோணேசர் கல்வெட்டு கூறுகிறது.

கந்தளாய்க்குளம்

குளக்கோட்ட மன்னன் கந்தளாய்க் குளத்தை உருவாக்கியதால், மறுத்த நிலம் செழித்து திருகோணமலை பசுமையும், செழுமையும் பெற்றதோடு, நெற்செய்கையும் விரிவாக்கம் பெற்றது. குளக்கோட்ட மன்னன் சிவசேத்திரத்தின் பராமரிப்புக்காக 2700 அவண நெல்விதைப்புத்தறையை உருவாக்கி, குன்றாத நீர்ப்பாசனத்திற்காக மேலும் அல்லைக்குளம், வெண்டரசன் குளம், ஆகியவற்றில், ஆற்று நீரும், வேற்று நீரும், ஊற்று நீரும் குளத்தில் நிறைந்திருக்க வழி செய்தான். கந்தளாய்க் குளக்கட்டின் அருகில் குளக்கோட்ட மன்னன் தாபித்த பிள்ளையார் இன்றும் அருள் பாலித்த வண்ணம் உள்ளார்.

 

“பார்தாங்கு கோயிலும் பொன்மண்டபமுங்
கோபுரமும் பரற்குநாட்டி
பேர்தாங்கு மாயனுக்கு மலங்கார
வாலய மொன்றியற்றி முற்றும்
கார்தாங்கு திருக்குளமும் பாவநாசச்
சுனையும் கண்டகண்டன்
சீர்தாங்கு குளக்கோட்டனென்னும் சோழகங்கணை
நம் சிந்தையில் வைப்பாம்”

பரற்கு – இறைவனுக்கு              – ஸ்ரீதெட்சண கைலாச புராணம்

கலியப்தம் 512ல் திருக்கோணேஸ்வரத் திருப்பணியைச் செய்து முடித்த குளக்கோட்ட மன்னன், கலியப்தம் 516ல் கந்தளாய்க் குளத்தைக் கட்டினான் என்று கோணேசர் கல்வெட்டுக் கூறுகிறது.

சிவசேத்திரம்

இந்தச் சிவசேத்திரத்தில் நித்திய நைமித்திய பூசைகள், ஆலய ஒழுங்கு முறைகள் தவறாது இடம்பெற, சட்ட திட்டங்களை மிக இறுக்கமாக வரைந்தான் குளக்கோட்டன். ஆலய நிர்வாகம், தொழும்புகள் (இறை தொண்டு) திருமுறை ஓதல் (ஓதுவார்), மலர் கொய்தல், தீபம் ஏற்றல், நெல்லை அரிசியாக்கல், அலகிடல், திருப்பொற்சுண்ணம் இடித்தல், விறகாக்கல், தளிசைத் தட்டு முட்டு விளக்கல், ஆலாத்தி எடுத்தல், மாலைகட்டல், மாதுமை சமேத கோணேசப் பெருமான் வீதிவலம் வரும்போது, நடனம் ஆடுதல் ஆகிய பணிகள் தவறாது இடம்பெற குளக்கோட்டன் ஆணையிட்டான்.

குளக்கோட்டன் ஆலயப்பணிகள் பற்றி உத்தரவு பிறப்பித்தல்

மங்கள வாத்தியம் வாசிப்போர், கணக்காளர், தீபம் ஏற்றுவோர் அனைவருக்கும் நிலங்கள் அளந்து கொடுபட்டதாக கோணேசர் கல்வெட்டு கூறுகிறது. கோணேசப் பெருமானுக்கு கறி அமுது படைக்க பசுநெய், கற்கண்டுப் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், வள்ளிக் கிழங்கு அவியல், பொரியல், முக்கனி மீது வதை பிழிந்த தேன், பலகாரவகை, பாகிலை, படைத்தான் குளக்கோட்ட மன்னன். திருக்கோணேஸ்வரத்தில் பதினோராயிரந் தீபங்கள் பிரகாசித்தன. இந்தத் தீபங்களை ஏற்ற ஆமணக்கு, தேங்காய் எண்ணெய் வகைகள் பாவனையில் இருந்தன. சிவசேத்திர உட்பிரகாரத்தில் உள்ள தீபங்கள் அனைத்தும், பசு நெய்யில் பிரகாசித்தது.  இந்த எண்ணெய் வகைகள் ஆலய வடகிழக்கில் இருந்த கிணறுகளில் சேமிப்பில் இருந்தன. சிறந்த சந்தனத்தை, புனகுடன் பன்னீர் கலந்து இறைபாவனையில் இருந்தது. நறுமணம் மிகுந்த சாம்பிராணிப் புகை, குங்குலியப் புகையால் சிவசேத்திரம் நறுமணம் வீசியது.

குளக்கோட்ட மன்னனின் மானியத்தை அனுபவித்த குடிகள், பயபக்தியோடு திருக்கோணேஸ்வரத்திற்கு பால், தயிர், நெய், மல்லிகை, முல்லை, தாமரை வகைகள், தாமரைத் திரி (தீபம் ஏற்ற), எண்ணெய் வகைகளை, அனுப்பி வைத்தனர். சிவசேத்திரமான திருகோணமலையில் குளக்கோட்டனின் ஆன்மீக சாம்ராச்சியம் ஒன்று நடைபெற்று வந்தது. இந்தச் சிவசேத்திரத்துடன் இணைந்திருப்பது குளக்கோட்ட மன்னனின் திருநாமம். திருக்கோணேஸ்வரத்தின் திருப்பணிகள் அனைத்தையும் நிறைவு செய்து, அதன் வளத்திற்கு தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் ஈந்து, பயபக்தியோடு இந்த சிவசேத்திரத்தை பராமரித்து வந்த மன்னன், தனக்குப் பின்னும், தனது திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தவறு நேர்ந்தால் வரும் விளைவை கோணேசர் கல்வெட்டில் காணமுடியும். மன்னனின் பேரவாவை கீழ்வரும் சிறந்த கவிதையில் காணமுடியும்.

மாறாத புனல் பாயும் திருக்குளமும் வயல் வெளியும் வருந்திச் செய்தே
வீறாக என்மரபோற்கு ஈயாமல் கோணமலை விமலற்கு ஈந்தேன்
பேறான பெரியோரே இதற்கழிவு நினைத்தவர்கள் பெட்டி நீங்கி
நீறாகப் போவர் இது நிச்சயம், நிச்சயம் கோண நிமலர் ஆணை

புனல் பாயும் – நீர்ப்பாசனம்                       — கோணேசர் கல்வெட்டு

மேற்கூறிய பாடல் குளக்கோட்ட மன்னனின் தணியாத தாகமாகும். மேலே சொல்லிய பாடல் ஆலயங்களில் தவறு செய்யும் அறங்காவலர் அனைவருக்கும் பொருந்தும். கோணேசர் கல்வெட்டு ஒரு தொகுப்பு நூல். பல்லவ, சோழ, பாண்டியர்கள் தாம் ஆட்சி செய்த நாடுகளில் உள்ள சிவசேத்திரங்கட்கு  மனமாரத் திருப்பணி செய்தும், மானியங்களை வழங்கத் தவறவில்லை.

Thirukoneswaram – திருக்கோணேஸ்வரம்

—————– இம்முன் இருந்த நிலை இல்லை இப்போது ——————–

பிறிட்டிறிக் கோட்டை முகப்பு – மையத்தில் மீன் இலச்சினை(தெளிவற்று)- பாவநாசம் தீர்த்தக் குண்டின்மேல் கோயில் இடித்த கற்களைக்கொண்டு கட்டப் பட்டது.

 

பிறட்டிறிக் கோட்டை வாசலில் இடது பக்கத் தூணில், இன்றுங்காணக்கூடியதாக உள்ள பாடல் இது.

முன்னே குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியைப்
பின்னே பரங்கி பிடிக்கவே – மன்னா கேள்
பூனைக்கண் செங்கண் புகைக்கண்ணன் போனபின்
மானே வடுகாய் விடும்.

-சுப திருஷ்ட முனிவர்.

என்று உளது.

பொருள்

முற்காலத்தில் குளக்கோட்ட மன்னன் செய்த திருப்பணியை, பிற்காலத்தில் பரதேசிகளான பறங்கி இடித்து அழிப்பான். இதற்குப் பின்னர் இந்த சிவசேத்திரத்தை முன் இருந்த நிலைக்குக் கட்டி எழுப்ப மன்னர் பரம்பரை இராது. போர்த்துக்கேயரை பூனைக் கண்ணன் என்றும், ஒல்லாந்தரை செங்கண்ணன் என்றும் பிரித்தானியரை புகைக்கண்ணன் என்றும் பொருள்படும்.

சதுர்வேதி மங்கலம்

நான்கு வேதங்களையும் முறையே கற்று அறிந்த சிவப் பிராமணர்களை, கந்தளாயில் குடி அமர்த்தி, சதுர்வேதி மங்கலம் என்னும் புனிதப் பெயரையும், அந்தப் பிரதேசத்திற்கு இட்டான் குளக்கோட்ட மன்னன், என்ற செய்தியை கற்சாசனம் மூலம் அறிய முடிகிறது. சீன தேசத்தவரான IBAN BATUTA என்பார் 1304 – 1377ல் திருக்கோணேஸ்வரத்திற்கு தரிசனத்திற்காகவும், ஆய்வுகள் மேற்கொள்ளவும் வந்தபோது சுமார் 1000 பிராமணர்கள் ஆலய சேவையில் இருந்ததாகவும், இரவில் 500 பெண்கள் வரையில் ஆடல் பாடல்களில் ஈடுபட்டதை நேரில் கண்டதாக கூறியுள்ளார்.

கயவாகு மன்னன்

திருக்கோணேஸ்வரம் பற்றிய நூல்களிலே கயவாகு என்னும் பெயரையுடைய சிங்கள மன்னன் சைவ ஆபிமானம் மிக்கவனாக மதிக்கப் படுகின்றான். “கடல் சூழிலங்கைக் கயவாகு மன்னன்” என்கிறது சிலப்பதிகாரம். குளக்கோட்டன் செய்த திருப்பணிகளைத் தொடர்ந்து, பொலநறுவையை ஆண்ட கயவாகு மன்னன் இந்த சிவசேத்திரத்தை புனருத்தாரணம் செய்தான். கடல் வழியாக வந்து சேர்ந்த அந்தணர்களை, ஆலயத்தில் அர்ச்சகர்களாக நியமனம் செய்தான், கயவாகு மன்னன். ஆலயத்திற்கு தேவையான வயல் நிலங்களை வழங்கினான். குளக்கோட்டன் முன்செய்தவாறு, சோழதேசத்திலிருந்து பல குடிகளை அழைத்து வந்து குடியிருத்தினான் கயவாகு மன்னனான்.

போர்த்துக்கேயர் வருகை

நாட்டை ஆளவந்த போர்த்துக்கேயரால், ஆலயம் அழிக்கப்பட இருந்த ஆபத்தை அறிந்த தொழும்பாளர் (இறை தொண்டு செய்தவர்கள்) இந்த சிவசேத்திரத்தில் இருந்த பெறுமதி மிக்க விக்கிரகங்களை, எடுத்துச் சென்று குளங்களிலும், நிலத்தடியிலும் புதைத்து வைத்த செய்தியை கோணேசர் கல்வெட்டு அறியத்தருகிறது. மேலும் ஆலய அழிப்பு நெருங்கியதும், தொழும்பாளர் எஞ்சியிருந்த எழுந்தருளி விக்கிரகங்களை எடுத்துச் சென்று தம்பலகாமம் கோணேசர் ஆலயத்தில் வைத்துப் பாதுகாத்தனர். 1624ல் போர்த்துக்கேயத் தலைவன், ஆயிரங்கால் மண்டபத்தையுடைய சிவசேத்திரத்தை இடித்துத் தள்ளி பாவநாசச் சுனையை மூடினான். ஆலயம் அழிக்கப்பட்ட பின்பும்  மாலையில் பூசை இடம்பெற்று வந்தது. பாவநாச தீர்த்தத்தை மூடி, இடித்த சாதிக் கருங்கற்களைக் கொண்டு பிறடறிக் கோட்டையைக் கட்டினர் ஆளவந்தோர். இந்த சிவசேத்திரத்தின் தொன்மையை அறியாத பரதேசிகள், பாடல் பெற்ற பெருந்தலத்தை தகர்த்தனர். ஆலய அழிப்பு விபரத்தை ஆங்கில மொழியின் சிறப்பை பார்ப்போம்.

PORTUGUESE SOLDIERS DRESSED AS PRIESTS BEGAN THEIR IMPERIAL ACTION. THE TEMPLE WAS LEVERED OVER THE EDGE INTO THE SEA (THE TEMPLE OF THOUSAND PILLARS) WAS LITERATELY PUSHED OVER THE ROCKS, INTO THE SEA; WITH ALL THOSE REMAINING BEING MASSACRED. THE FINAL MONUMENTS OF THE TEMPLE COMPLEX WERE DESTROYED TWO YEARS LATER IN 1624. LOOTING WITH GOLD, PEARLS, AND PRECIOUS STONES COLLECTED FOR MORE THAN 1000 YEARS

(visit - https://www.youtube.com/watch?v=PibAqsHTlXY -)

மாதுமையாள் சமேத கோணேசர்

மனிதனுக்கு மன அமைதி தருவது ஆன்மீகம். பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்துவது மதம். திருகோணமலை வாழ் சைவச் சமூகம் 400 வருடங்களாக ஆலயம் அழிந்த நிலையிலும், மாதுமையாள் கோணநாயகர் உள்ளிட்ட ஐந்து விக்கிரகங்கள், திருகோணமலை வாழ் மக்கள் செய்த மாதவத்தால் 27.7.1950ல் திருகோணமலை 10ம் குறிச்சியில் கிணறு தோண்டியபோது தோன்றின. நாலு நூற்றாண்டுகளாக மண்மேவிய நிலையிலும், அகழ்ந்தபோது தோன்றிய பார்வதியின் (திரிபங்க வடிவம்) கழுத்தில் தங்கத்தாலான கம்பியில் கோர்த்திருந்த தாலி எவ்வித பாதிப்புமின்றி இருந்தது ஓர் அற்புதமே.

Thirukoneswaram – திருக்கோணேஸ்வரம்

இப்போதைய கோயில் தோற்றங்கள்

கிழக்குக் கோபுரம்
தெற்குக் கோபுரம்
நந்தி தேவர்
அது சோழர் காலத்ததென்றம்22/1/2013 ல் கண்டெடுக்கப் பட்டதென்றும் கூறும் பெயர்ப் பலகை

 

சிவபெருமான் சிலை

சுவாமி கெங்காதரானந்தா ஜீ

கேரள நாட்டிலிருந்து வந்து துறவு பூண்ட இளைஞன் பல்லாண்டு தவமியற்றி யோக நிலையில் இருந்த திருத்தலம், திருக்கோணேஸ்வரம். இவர்தான் சிவயோக சமாஜம் தாபித்த கெங்காதரானந்தா சுவாமிகள். 1946 தொடக்கம் இந்த சிவசேத்திரத்தில் வெள்ளை உடை தரித்து, ஒதுக்குப் புறமாக ஒதுங்கி இருந்து தியானஞ் செய்வார். சுவாமிக்கு திருக்கோணேஸ்வரம் ஞானாலயமாக இருந்தது.

தொன்மை வாய்ந்த இவ்வாலயம், இடிபாடுகள் இருந்த காலப் பகுதியில், வேதங்கள் இறைவனைத் துதித்தன. திருமுறைகள்தான் நிதம் நிதம் பண் இசைத்தன.  1952ம் வருடத்தில்முன் கிடைத்த திருப் பெருவடிவங்களை சைவப் பெரியார் டாக்டர் பாலேந்திராவின் பெருமுயற்சியால் ஈழத்திருநாடு முழுவதும் (யாழ்ப்பாணம் உட்பட) ஊர்வலமாக பல வாரங்கள் வந்து தரிசனம் தந்த காட்சி எமது நினைவிலுள்ளது. மாதுமையாள் சமேத கோணநாயகர் ஊர்வலம் வந்தபோது, சம்பந்தப் பெருமானின் திருக்கோணேஸ்வரத் திருப்பதிகம், கோணேஸ்வரப் பெருமானை தரிசிக்க வந்தவர்கள் அனைவருக்கும் தரப்பட்டது. சைவ மக்களின் தரிசனத்தின்பின் திருகோணமலை உச்சியில் சிறு ஆலயம் அமைத்து சிவ விக்கிரகங்கள் எழுந்தருளப் பெற்றன. 3.4.1963 அன்று முதலாவது திருக்குடமுழுக்கு இடம் பெற்றது. 1990ல் இந்த சிவசேத்திரம் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் மீண்டும் சேதமுற்று, பூசை வழிபாடுகள் ஏதும் இன்றி நின்றன. சித்தர் திருமூலரால் சிவபூமி என்றழைக்கப் பெற்ற ஈழத் திருநாட்டில், நிரந்தர அமைதியில் மேன்மைகொள் சைவ நீதி நிலைகொள்ள, நிரைகழலரவம் சிலம்பொலியலம்பும் நிமலர் அருள் வேண்டி வணங்குவாம்.

 

(கிழக்கு)

உசாத்துணை நூல்கள்

  1. திருக்கோணேஸ்வரம் – கோணேஸ்வர ஆலய பரிபாலன சபை வெளியீடு-2014
  2. தெட்சண கைலாச புராணம் – தல புராணம்
  3. திருக்கரைசைப் புராணம்     – தல புராணம்
  4. திருக்கோணாசல புராணம்  – கோணேசர் கல்வெட்டு
  5. TRINCOMALIE BRONZES          _ DR. W. BALENDRA 1953
  6. கோணேசர் ஆற்றுப்படை
  7. திருக்கோணாசல வைபவம்
  8. கோணமலை அந்தாதி
  9. செவ்வந்திப் புராணம்
Exit mobile version