அறம்

அறம்

 ‘அறம் செய்ய விரும்பு’ என்ற ஔவையார் கூற்றின் அர்த்தமென்ன? அறம் என்றால் சாதாரணமாக சொல்லப்படும் தர்மம் (ஈதல்) மட்டும் அல்ல. செய்பவர் செய்யப்படுபவர் இருவருக்குமே மகிழ்வைத்தரும் செயல்கள் சமூக நலனையும் ஏற்படுத்துமாயின் அதுவே அறம்.

பசிப்போருக்கு முடியக் கூடியவரால் உண்டி தருவதும் கற்க விரும்பும் சரியான சீடனுக்கு தகுந்த ஆசிரியன் கற்பிப்பதும் அறம். போர்க்களத்தில் எதிரியைக் கொல்லாமல் யுத்தம் முடியும் என்றால் அதனைச் செய்வதும்,  காயப்பட்டவன் வெளியேற அனுமதிப்பதும், எதிரி சமாதானத்திற்கு வந்தால் ஏற்பதும் செய்த குற்றத்திற்கு மன்னிப்பு கோரினால் ஏற்று பகைமை பாராட்டாமல் இருப்பதும் அறம். எதிரியாயினும் உன்னிடம் பேச வந்தால் உபசரிப்பதும் முறையான அழைப்பை ஏற்பதும் அறம். குடும்ப நலனுக்காக கணவன் மனைவியிடையே விட்டுக் கொடுப்பதும் நல் அறமே. இவை யாவும் இரு பக்கமும் மன நிம்மதி தருவதுடன் சமூக நலனையும் மேம்படுத்தும். நமது இதிகாசங்கள் ஆன மகாபாரதம், இராமாயணம் இரண்டிலும் இவை விரிவாக சித்தரிக்கப்பட்டுள்ளன.

மேற்குலகில் (நாம் இப்போ அங்குதான் வாழ்கின்றோம்) செய்த தவறுக்கு மனவருத்தம் (saying sorry or expressing regret) சொன்னால் ஏற்று மன்னித்து மறந்துவிடும் மிகச் சிறந்த விழுமியம் உண்டு. ஆழ்ந்து யோசித்தால் அவர்கள் பொருளாதாரத்தில் மேலோங்கி இருப்பதற்கு அவர்களின் இத்தகைய மனப்பாங்கு துணையிருக்கிறது என்பது தெரியும். கோபங்கள் மனஸ்தாபங்களை வைத்திருப்பது, அதனைச் இரை மீட்டு வளர்ப்பது, அவர்கள் ஆரோக்கியத்திற்கும் நல்லதல்ல, பொருளாதார முன்னெடுப்புக்கும் நல்லதல்ல. சிறப்பாக சிந்திக்கவும் திறனாக செயல்படவும் தடையாக இருக்கும். அதனால் பெறுபேறும் குறைந்தளவிலேயே இருக்கும். கோபத்தை ஏற்படுத்தும் தவறைச் செய்தவரும், மனவருத்தம் தெரிவிப்பதன் மூலம் தன் தவறுக்கான எதிர்வினையின் தாக்கத்திலிருந்து விடுபடுகிறார்.  Bible மேற்கு நாட்டவரின் முதன்மையான போதனை நூல். அங்கு சமூக நலனைப் பற்றியே அழுத்தம் உள்ளது. ‘அயலவனை நேசி’, ‘இடது கன்னத்தில் அறைந்தால் வலது கன்னத்தையும் கொடு’ என்றிருப்பவை அதற்கு உதாரணங்கள். மனவருத்தம் தெரிவிப்பதென்பது இவற்றின் அடிப்படையிலிருந்து எழுந்த ஒரு விழுமியமே  (எமது சமய நூல்களிலும் இவையுண்டு எனிலும் ஆன்மீக ஈடேற்றத்திற்கே அழுத்தம் அதிகம்). மன்னிப்பு கோரல் (மனவருத்தம் தெரிவித்தல்) மன்னித்தல் இரண்டும் அறச்செயலின் முக்கிய நிலைகள். நாகரீகத்தின் பலமான தூண்கள்.

அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு -திருக்குறள் —                                                              –அதிகாரம்  அறன் வலியுறுத்தல் குறள் 32

அறம் செய்வதை விட நன்மையும் இல்லை. அதைச் செய்ய மறப்பதைவிட கெடுதியும் இல்லை                                                                                                                –சாலமன் பாப்பையா உரை

அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்ற தறம்    —                                                                                                 அதிகாரம்  அறன்வலியுறுத்தல் குறள் 35

பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடிந்து ஒழுகுவதே அறமாகும்.   —- மு.வ. உரை

அறத்தை கடைப்பிடிக்க வேண்டும் எனப் பல பாடல்களில் வெளிக்கொணர்ந்துள்ளார் தமிழ் சித்தர், நாயனார் திருமூலர். அறவழி வாழ்வதே இறைவனை அடைவதற்கான முதல் படி என்று செப்புகிறார் அவர்.

அறம் அறியார் அண்ணல் பாதம் நினையும்
திறம் அறியார் சிவலோக நகருக்கு
புறம் அறியார் பலர் பொய்மொழி கேட்டு
மறம் அறிவார் பகை கேட்டு மன்னிநின்றாரே

அறத்தை நினையாதவர் சிவபெருமானது திரு வடியை நினைக்கும் முறையையும் அறியாதவரேயாவர். அதனால் அவர் சிவலோகத்தின் அருகிலும் நெருங்குதல் இயலாது. (நரகமே புகுவர் என்பதாம்) தம்மோடொத்த அறிவிலிகள் பலர் கூறும் மயக்க உரைகளைக் கேட்டு, அவற்றின்வழி நின்று பாவங்களைச் செய்பவர் கட்கு அப்பாவமும் பொருளைக் கொடுத்தல் மீட்டல்களால் பலரிடத்து உண்டாகும் பகைகளுமே எஞ்சுவனவாம்.

அது இருக்கட்டும், அதென்ன ‘விரும்பு’ என்று சொல்லியிருக்கிறார்? ஒன்று விரும்பியதையே எவரும் செய்ய நாடுவர் என்பதாலும், மற்றது விரும்பினாலேயே மனதளவில் அது வந்துவிடும் என்பதாலேயுமே(சில நேரங்களில் செய்ய முடியாமல் இருந்தாலும் கூட).   மேலும் சொன்னால் விரும்புதல் இச்சா சக்தி. கிரியா சக்திக்கு அதுவே முதற்படி. எண்ணத்தைத் தொடர்ந்தே செயல் வருகிறது. விரும்பு என்பதில் நினை; எண்ணு என்ற அறிவுறுத்தல் அடங்கி உள்ளது.  செய்ய விருப்புதல் நல்ல நிலைப்பாடு. அதனைச் செய்தல் வலிமையான விளைவைத் தரும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.