திருமூலர் காட்டும் வழி

பிரித்தானிய சைவத் திருக்கோவில் ஒன்றியம் 16ஆவது இலண்டன் சைவ மாநாட்டில் இடம்பெற்ற ‘பெரிய புராணமும் சைவ வாழ்வியலும்’ என்னும் ஆய்வரங்கில் 19-4-2015 அன்று ஹரோ சித்தி விநாயகர் ஆலயத்தின் சார்பில் சமர்ப்பிக்கப் பட்ட பெரிய புராணத்தில் திருமூலர் காட்டும் வழி என்ற தலைப்பிலான பேச்சு.

எல்லாம் வல்ல ஹரோயம்பதி உறை சித்தி விநாயகர் பொற்பாதங்கள் போற்றி.
நாவிற் சரஸ்வதி  நற்றுணையாக

வணக்கத்திற்குரிய ராஜலிங்க மாணிக்கவாசக சுவாமிகள்(,கூனம்பட்டி அதீனம்) அவர்கட்கும், உலகம் முழுவதும் சைவம், தமிழ், இசை மூன்றையும் பரப்பி தொண்டாற்றும் இந்தியாவிலிருந்து வருகை தந்திருக்கும் கலைஞர்கட்கும், இலங்கை, மலேசியாவில் இருந்து வருகை தந்திருக்கும் அறிஞர்கள் பெரியோர்கட்கும், Hon.Lee Scatt MP-word south, Hon.Gareth Thomas MP Ealing south அவர்கட்கும், மதிப்புக்குரிய ஒன்றியக் குழுவினர்க்கும், கோவில் பூசகர்கட்கும், பெரியோர்கள், மற்றும் குறிப்பாக புலம்பெயர் நாட்டில் சைவத்தையும், தமிழையும் தக்கவைத்து ஓங்கச் செய்ய விருக்கும் எமது வருங்கால சிற்பிகளான மாணவர்கள், இளைஞர்கள் சிறுவர்கள் யாவர்க்கும் அன்பான, பணிவான வணக்கங்கள்.

இங்கு எமது கோவில் சார்பில் பேச வேண்டிய விடயம், பெரிய புராணத்தில் திருமூலர் காட்டும் வழி என்பதாகும்.
சைவத்தைச் சிறப்பித்த பெரிய புராணம் கூறும் 63 நாயன்மார்களில் ஒருவர் திருமூலர்.
நாயன்மார்கள் சைவத் தமிழ்க் குரவர்கள். அவர்களை நாம் குரு ஸ்தானத்தில் வைத்துப் போற்றுகின்றோம்.
குருவென்பதற்கு முன், சாதாரண உயர்நிலைப் பள்ளி ஆசிரியரை நோக்குவோம். – – – – – – –  ஒன்று இவ்விடத்தில் குறிப்பிடப்பட வேண்டும். உயர் நிலைப் பள்ளி மாணவர்கள், ஆரம்பப் பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் வெவ்வேறு அறிவு நிலைகளில் உள்ளனர். — ஆன்மாக்களும் வெவ்வேறு நிலைகளில் உள்ளமையும் அவர்கள் ஈடேறுவதற்கு அவரவர் பக்குவத்திற்கேற்ப முயல வேண்டும்வென்பதும் இதற்கு ஒப்பான நிலைமை—-. ஆரம்பப் பள்ளி ஆசியரின் பொறுப்பும் திறனும் மிகவும் அதிகமாக இருக்க வேண்டுமென்பதையும் இவ்விடத்தில் குறிப்பிட வேண்டும். நான் சொல்லபோகும் உதாரணத்தின் முடிவில் இதனை சிந்தித்து யூகிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். – – – – – – – நிற்க.

உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவர் இரு வழிகளில் தனது கற்பித்தலை மேற்கொள்ளலாம். ஒன்று விடயத்தை நேரடியாக மாணவர்க்குச் சொல்லுதல். அடுத்தது விடயத்தை நோக்கி மாணவரை வழிப்படுத்துதல்.

உங்களுடைய Physics ஆசிரியர் Ohm ‘s Law கற்பிக்கிறார் எனவைத்துக் கொள்வோம். அவர் Ohm ‘s Law வை நேரடியாக எடுத்துரைக்கலாம். Ohm’s law states that the current flowing through a given conductor is directly proportional to the voltage or potential difference applied to its terminals under the condition of uniform temperature. ‘directly proportional’, ‘uniform temperature’ என்ற எண்ணக் கருக்களை தெரிந்த, மொழி ஆற்றலுடைய மாணவன் இதனை விளங்கிக் கொள்வான்.

அல்லது இன்னொரு வழியில், ஒரு மின்சூழ் மின்கலம், சில இணைக்கும் கம்பிகள், ஒரு மின்சூழ் மின்குமிழ் என்பவற்றை கொடுத்து மின்கலத்தில் குறிக்கப் பட்டுள்ள 1.5V என்னும் குறிப்பைக் காட்டி, 1.5 volt என்பது மின்னோடத்தை செலுத்தும் ஆற்றல் என்று கூறுவார். மின்குமிழுடன் இணைத்து அது ஒளிர்வதை காண்பிப்பார். ஓமின் விதியை நோக்கி செல்கையிலுள்ள முதற்படி அது. பின்னர் இன்னொரு மின்கலத்தையும் சேர்த்து இரண்டையும் ஒன்றாக்கி மின்குமிழ் முன்னையைவிட பிரகாசமாக ஒளிர்வதையும், ஒரு அம்பியர் மானியை இணைப்பதன் மூலம் மின்னோட்டம் உண்மையில் இரு மடங்காகி உள்ளமையையும் புரிய வைக்கிறார் — current flowing through a conductor is directly proportional to the voltage — என்பது வந்துவிட்டது. இது ஓமின் விதியை நோக்கி செல்கையிலுள்ள இரண்டாம் படி. இனி ஒரு மோட்டர் சைக்கிள் மின்குமிழை முன்னையதற்காக பிரதியீடு செய்து அதற்கு இவ்வாறான தோற்றப் பாட்டிற்கு வேறு voltage  அளவு தேவை –அதனாலேயே given conductor என்று சொல்கிறோம். –இவ்வாறு படிப்படியாகச் சென்று, ஓமின் விதியை முழுமையாக விளங்கப் படுத்துகிறார்.

ஆசிரியர்கள் தாம் கற்பிக்கும் மாணவர்கட்கு குரு. அவர்களது அறிவுத் தேடலின் வழிகாட்டிகள். மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் தெய்வத்திற்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள். இது எமது கலாசாரம். புலம் பெயர் மக்களாகிய நாம் இதனைக் கடைப்பிடித்து எமது வாழும் நாட்டில் மதிப்பையும் உயர்வையும் பெறவேண்டும்.

நாயன்மார்கள் மேற்கூறிய இரண்டு வழிகளிலும் எம்மை ஆன்மீக ஈடேற்றத்தை நோக்கி ஆற்றுப்படுத்துகின்றனர்.
தமது பதிகங்கள் மூலம் எடுத்துரைக்கின்றனர்.
வாழ்க்கைமுறை மூலம் செய்து காட்டுகின்றனர்.

அதனால் சைவத் தமிழர்கள் யாவர்க்கும் நாயன்மார்கள் ‘குரு’ நிலையில் அமைகிறார்கள்.

இறைவன் அவதரித்தால் -அது ஜெயந்தி தினம் ஆக கொண்டாடப்படும்.. (உ+ம ராம ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி -பிறந்த தினம்) –நாயன்மார் வாழ்ந்து காட்டிச் சென்றவர்கள். வாழ்வு முடிவில் இறை நிலை அடைகின்றனர். அதனால் அவர்கள் வாழ்வை பூர்த்தியாக்கும்தினம் (மறைந்த தினம்) குரு பூசையாக கொண்டாடப்படும்.

அடுத்து பெரியபுராணம், திருமுறைகள் (பன்னிரு திருமுறைகள்) இரண்டும் என்னவென்று சிறிது பார்ப்போம்.

திருமுறைகள் நாயன்மார்கள் பாடிய தோத்திரங்கள் அல்லது செய்யுள்கள். பெரிய புராணம் நாயன்மார்களுடைய வரலாறு.

முன்னையதை தொகுத்தவர் (பல அடியார்களால் பாடப் பெற்றமையால்) நம்பியாண்டார் நம்பி. இவருக்கு 1வது ராஜ ராஜ சோழன் என்னும் அரசன் தூண்டுதலாகவும் ஆதரவாகவும் இருந்தான். அதானால் அதற்குரிய பெருமை அவ்வரசனையும் சாரும்.

பின்னையதை எழுதியவர் சேக்கிழார் என்னும் புரவலர். இவருக்கு 2ஆம் குலோத்துங்க சோழன் என்னும் அரசன் ஆதரவாக இருந்தான்.

(ஆதரவு = sponsorship)

சேக்கிழாருக்கு பெரிய புராணம் தொகுக்க அடிப்படையாக இருந்தது சுந்தரமூர்த்தி நாயனாருடைய திருத் தொண்டர் தொகை என்னும் பதிகமும், நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொண்டர் திருவந்தாதியும். இவையிரண்டிலும் 63 நாயன்மார்களும் (முன்னையத்தில் 62) குறிப்பிடப் பட்டுள்ளனர். அவர்களின் வாழ்க்கை வரலாறுகளையே சேக்கிழார் விரிவாகவும், முழுமையாகவும் செய்யுள் வடிவில் நாயன்மார் வரலாறு, அல்லது திருத்தொண்டர் புராணம் என்று விபரிக்கப்படும் பெரிய புராணமாக தொகுத்துள்ளார்.

(தொகையா நாவ லூராளி
தொடுத்த திருததொண் டப்பெருமை
வகையால் விளங்க உயிர் நம்பி
யாண்டார் வகுப்ப மற்றதனைத்
தகையா அன்பின் விரித்துலகோர்
தம்மை அடிமைத் திறப்பாட்டின்
உகையா நின்ற சேக்கிழான்
ஒளிர் பொற் கமலத் தாள்பணிவாம்)

  • நாயன்மார் வரலாறு — பெரியபுராணம் ; நாயன்மார் ஆக்கங்கள்; (தோத்திரங்கள் அல்லது செய்யுள்கள்) — திருமுறைகள்.
  • நம்பியாண்டார் நம்பி (1ம் ராஜ ராஜ சோழன் காலம்) — 1௦௦௦ ஆண்டு
  • சேக்கிழார் (இரண்டாம் குலோத்துங்க சோழன் காலம்)-11௦௦ ஆண்டு
  • (திருமூலர் 800 – 1000 இடை)-
  1. இவர் இயற்றிய தோத்திரங்கள் திருமந்திரம் என்னும் பெயர் பெற்று 1௦வது திருமுறையாக, பன்னிரு திருமுறைகளில்  இடம்பெற்றுள்ளது.
  2. 30ஆவது நாயனாராக இவரின் வரலாறு பெரிய புராணத்தில் இடம் பெறுகிறது.

இவையாவும் தமிழ் நாட்டில் தோன்றியவர்கள் சம்பந்தமானது. யாவும் தமிழிலேயே உள்ளன. —

இலங்கையில் பொதுவாக தமிழ் பேசும் மக்களே சைவ/இந்துமதத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். ஆனால் இந்தியாவில் வேறு மொழிகள் பேசும் பல கோடி மக்கள் இந்து மதத்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு அவரவர் மொழிகளில் எழுதப் பெற்ற நூல்கள் உண்டு.

எல்லோரும் ஏற்றுக்கொள்ளபடும், சமஸ்கிருத மொழியில் எழுதப் பெற்ற நூல்களும் உள்ளன. நான்கு வேதங்கள், ஆகமங்கள் உபநிடதங்கள் பதினெண்புராணங்கள், உப புராணங்கள் என்ற பல இதில் அடங்கும். இவை தமிழ் உட்பட சகல மொழிகளிலும் (இந்து மதத்தவர்க்கான) மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.

 பெரிய புராணம் மேற்சொல்லப்பட்டவறில் உள்ள பதினெண் புராணங்கலிலிருந்து வேறுபட்டது. அவற்றுள் அடங்காதது.
பதிணெண்புராணங்கள் புவி தொடங்கிய காலந்தொட்டு வேதவியாசர் காலம் வரை நடந்த சம்பவங்கள், இருந்த ராஜ வம்சங்கள், வணங்கப்பட்ட தெய்வ வடிவங்கள், பின்பற்றப்பட்ட வாழ்க்கை முறைகள் என்பவை பற்றி வெவ்வேறு முனிவர்களால் வெவ்வேறு காலங்களில் வாய்மொழியாகவும் சில ஏடுகளிலும் பேணப்பட்டவை. பின்பு வடமொழியில் வேதவியாசரால் தொகுக்கப்பெற்று ஏட்டு வடிவானது. அவற்றில் ஒரு காலவரிசை (chronological order) உண்டு.

பெரியபுராணம் தமிழ்ச் சைவ குரவர்கள்/பெரும் புலவர்களின் வரலாறு. தமிழில் எழுதப் பெற்றது. அதில் சமகாலத்து நாயன்மார்கள் பலரின் வரலாறுகளும் உண்டு. பலருடைய வரலாறென்பதால் பெரிய புராணம் என்ற பெயர் வரப்பெற்றது.

சிவபெருமானை முழுமுதல் கடவுளாக கொண்டு வழிபடுபவர்கள் சைவ சமயத்தவர் எனப்படுகின்றனர், மகாவிஷ்ணுவை முதற்   கடவுளாகக் கொண்டு வழிபடுபவர் வைஷ்ணவர் எனப்படுகின்றனர், சக்தியை/ அம்மனை முதர்கடவுலாகக் கொண்டு வழிபடுபவர் சாக்தர் எனப்படுகின்றனர். இதை விட கணபதியை/பிள்ளையாரை அல்லது முருகனை முன்னிறுத்தியும் வழிபடலாம். இவையாவும் இந்து மதம் அல்லது இந்து சமயம்.

ஒருவர் இறந்துவிட்டால் நாங்கள் இன்னார் இறைவனடி சேர்ந்தார் என்றுதான் சொல்கிறோம். ஏனென்றால் அதுதான் எமது விருப்பம். மனிதன் இறைவனின் நிலையை அடைதலே வாழ்க்கையின் இலக்கு என்று இந்து சமயம் சொல்கிறது.

அந்த இலக்கை நோக்கி திருமூலர் என்னும் நாயனார் எம்மை சிறப்பாக ஆற்றுப் படுத்துகிறார்.
ஒருவர் சிறந்திருந்தால்; சமூகத்தில் உயர்ந்திருந்தால் அவருக்கு சிறந்த குரு அமைந்திருக்க வேண்டும்.
திருமூலரின் குரு சிவபெருமானின் வாகனமாகிய நந்தியம்பெருமான். அவருடைய குருவோ தட்சணாமூர்த்தி, சாட்சாத் சிவபெருமானே. அதனால் திருமூலர் நாயனாராகவும், குருவாகவும், மாபெரும் சித்தராகவும் திகழ்ந்தார்.
சிவன்கோவில் ஒன்றில் கருவறைக்கான கோபுரத்தின் தெற்குப் பக்க சுவரில் தட்சணாமூர்த்தி சொரூபத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். தவக் கோலத்தில் காட்சிதரும் சிவபெருமான். சாந்தமே உருவான, அமைதியான தோற்றம். பேச்சொன்றுமின்றி அவ்வுருவமே போதிக்கிறது. அவ்வுருவை அண்மிக்கும் போது சாந்தி தரும் ஒரு அன்புக் காலலை (வீச்சை) நாம் உணரலாம். உருவத்தைக் கடந்து அதை உணர்ந்தால் அந்த அன்பே சிவம். அதனை திருமூலர்

அன்பும் சிவமுமிரண்டென்பர் அறிவிலர்
அன்பேசிவமாவ தாரும் அறிகிலர்
அன்பே சிவமாவா தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாக அமர்ந்திருந்தாரே

என்று உணர்ந்து உருகிக் கூறுகிறார்.

மேலும் நோக்கினால் தட்சணாமூர்த்தியின் வலது கரம் சின்முத்திரை எனப்படும், பெருவிரலுடன் சுட்டு விரல் சேர்த்து மற்ற மூன்று விரல்களும் மேற்பார்த்திருக்க ஆசீர்வதிக்கும் தோரணையில் அமைந்திருக்க, இடதுகரம் கமண்டலம் ஏந்தி, தண்டத்தில் தாங்கி நிற்கும்.
சின்முத்திரையே போதனை, சகல இந்துமதத் தத்துவங்களின் விளக்கம். பெருவிரல் பதி அல்லது பரம்பொருளை அதாவது இறைவனை குறிக்க சுட்டுவிரல் பசு அல்லது நாம் உயிர் என்று நினைக்கும் ஆன்மாவை, குறிக்கிறது. மற்ற மூன்று விரல்களும் ஆணவம், கன்மம், மாயை எனப்படும் மும்மலங்களை, நடுவிரல், மோதிரவிரல், சின்னிவிரல் என்ற ஒழுங்கில் குறிக்கின்றன.
சுட்டுவிரல் போல ஆன்மா மும்மலங்களுடன் சேர்ந்து உள்ளது. அவற்றை களைந்து கடவுளுடன் ஆன்மா சேரவேண்டும். களைந்தால்தான் சேரமுடியும். இறைவனைக் குறிக்கும் பெருவிரலோ தனியாக இருப்பது, இறைவன் நிர்மலன், மலங்களற்றவர் என்பதைக் காட்டுகிறது.
இதனையும், இவையொவ்வொன்றினது அதாவது, பதி, பசு ஆணவம், கன்மம் மாயை ஆகியவற்றின் இயல்புகளையும் திருமூலர் பல பாக்களில் விளக்குகிறார்.
அவற்றில் ஒன்று

பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போற்பசு பாசம் அனாதி
பதியினைச் சென்றணு காப்பசு பாசம்
பதியணு கிற்பசு பாசம் நில் லாவே

பதி, பசு பாசம் மூன்று ஆகும். அவை அனாதியாக; ஆதியிலிருந்து நாம் இவ்வுடலைப் பெறுவதற்கு முன்னமே, உள்ளன. பதியினை சேராவிடின் பசுவைப் போலவே பாசமும் தான்தோன்றியாகும். பதியை பசு சேருமாயின் மும்மலங்களும் பொருளற்றதாகி, அற்றுப் போகும், என்பதே இதன் அர்த்தம்.

 நீ உடம்பன்று, மனம் அன்று, புத்தியன்று, ஆத்மா. ஆத்தமா என்றும் அழியாதது

என்று எங்கள் யோக சுவாமிகள் கூறியுள்ளார். இத்தகைய ஆன்மாவை, நாம் செய்த வினைக்கீடாக தொடராக பிறவியை தருபவன் இவ்வுடம்பினுள் பரிசாக வைத்திருக்கிறான். அத்தகைய சிறந்த சிவன்மேல் அன்பை வைத்து, அவனை நாடாமல், இச்சைவழிச் சென்று தமது விருப்பத்தை உலகப் பற்றாகிய பிறப்பு இறப்பிலேயே வைக்கின்றனர் என்று திருமூலர் கூறுகின்றார்.

நித்தலும் துஞ்சம் பிறப்பையும் செய்தவன்
வைத்த பரிசு அறிந்தேயும் மனிதன்
இச்சையுளே வைப்பார் எந்தைபிரான் என்று
நச்சியே அண்ணலை நாடுகிலாரே

சித்தாந்த எண்ணக் கருக்களைப் பற்றி அல்லாமல், அவற்றுடன் நிற்காமல், வீடுபேறு அல்லது பதியின் நிலையை பசு அடைவதற்கு உலகில் முதலில் செவ்வனே வாழ வேண்டும் அறத்தை கடைப்பிடிக்க வேண்டும் எனப் பல பாடல்களில் வெளிக்கொணர்ந்துள்ளார். அறவழி வாழ்வதே இறைவனை அடைவதற்கான முதல் படி என்று செப்புகிறார் திருமூலர்.

அறம் அறியார் அண்ணல் பாதம் நினையும்
திறம் அறியார் சிவலோக நகருக்கு
புறம் அறியார் பலர் பொய்மொழி கேட்டு
மறம் அறிவார் பகை கேட்டு மன்னிநின்றாரே

அறத்தை நினையாதவர் சிவபெருமானது திரு வடியை நினைக்கும் முறையையும் அறியாதவரேயாவர். அதனால் அவர் சிவலோகத்தின் அருகிலும் நெருங்குதல் இயலாது. (நரகமே புகுவர் என்பதாம்) தம்மோடொத்த அறிவிலிகள் பலர் கூறும் மயக்க உரைகளைக் கேட்டு, அவற்றின்வழி நின்று பாவங்களைச் செய்பவர் கட்கு அப்பாவமும் பொருளைக் கொடுத்தல் மீட்டல்களால் பலரிடத்து உண்டாகும் பகைகளுமே எஞ்சுவனவாம்.

பல செயுல்களில் வாழ்வின் நீர்க்குமுழி தன்மையை வெளிக்கொணர்ந்து சிவனை நாடவேண்டிய அவசியத்தை வலியுறுத்திய திருமூலர், எமது நாளாந்த வாழ்க்கை எவ்வாறு அமைய வேண்டுமென கூறும் ஒரு இடத்தை பார்ப்போம்.

யாவர்க்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவிற்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே.

காலையில் இறைவனுக்கு பச்சிலை (வில்வம்) இட்டு வணங்கியும், பசு, நாய், பூனை, காகம் போன்ற பிராணிகட்கு சிறிது உணவளித்தும், வறியார்க்கு சோறிட்டும், மற்றவர்கட்கு இன்சொல் கூறியும், நாம் வாழ்வோமாக. இதனால் எல்லா நலன்களையும் அடையலாம். உலகிற்கு நாம் உதவினால் உலகம் நமக்கு உதவுகிறது.

தமிழரின் பல பண்புகளின் இன்றியமையை திருமூலர் கூறியுள்ளார்.  விருந்தோம்பல் பற்றி பல தமிழ்ப் புலவர்கள், சிறப்பித்துச் சொல்ல, இவர் வேறு கோணத்தில் நாம் உணவு உட்கொள்ள வேண்டிய முறையையே விளக்குகிறார். ஆரோக்கிய வாழ்வுக்கு அதுவே சிறந்த வழி என்று அழுத்தமாக வரையறுக்கிறார்.

ஆர்க்குமிடுமின் அவரிவர் என்னமின்
பார்த்திருந்து உண்மின் பழம் பொருள் போற்றமின்
வேட்கையுடையீர் விரைந்து ஒன்றை உண்ணமின்
காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே

(செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத்தவர்க்கு – ஒப்பிடுதல்)

எல்லாருக்கும் கொடுங்கள் அவரிவர் என்று எண்ணவேண்டாம், அடுத்தவர் வருகை பார்த்து உண்ணுங்கள் பழம் பொருளை (எல்லாவற்றிற்கும் ஆதாரமாகும் இறைமையை) போற்றுங்கள் ஆர்வத்தால் வேகமுடன் உண்ணவேண்டாம். காகம் கரைந்து உண்ணுவதை கருத்தில் வைக்கவும். சுருக்கமாக – பகுத்துண்டு வாழுங்கள்.

குரு எப்படி இருக்க வேண்டும், சரியானவர் குருவாக இல்லாவிடில் அது உயர்வுக்குப் பதில் தாழ்வையே தரும் என்பதை அறிவுரையாக தருகிறார் திருமூலர்.

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழும் ஆறே

மக்கள் அஞ்ஞானத்தை நீக்கும் குருவைத் தேடி அடையார். அஞ்ஞானத்தைப் போக்காத குருவைத் தான் அடைவர். அவர்கள் செயல் பிறவிக் குருடாக இருக்கும். இரண்டு குருடர்கள் கண்மூடி ஆடும் ஆட்டம் ஆடிப் பள்ளத்தில் விழுதலுக்கு ஒப்பாவர். குருட்டாட்டம் என்பது சிறு பிள்ளைகள் தம் கண்ணைத் துணியால் மறைத்துக் கொண்டு, எதிரிலுள்ள பிள்ளைகளைத் தொட முயற்சி செய்தல்.

திருமந்திரத்திலுள்ள மூவாயிரத்திற்கு அதிகமான செயுல்களில் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையும், எமது ஒழுக்கமும், சமூகத்தின் நிலையும் எவ்வாறு இருக்கிறது, உண்மையில் இருக்கவேண்டுமென நடத்தைக் குறியீட்டு அறிவுறுத்தலாக — code of conduct instruction– சொல்லப் பட்டுள்ளது. திருக்குறளுக்கு சமாந்தரமான தன்மையை பல இடங்களில் நாம் காணலாம்.

திருமூலரின் திருமந்திரம் மக்களின் வீணான நடத்தைகளை எள்ளி  நகையாடும் தன்மையானது. சித்தர்களின் பற்றற்ற வெளிப்பாடாக தோற்றமளித்தாலும் அப்படிச் சொல்வதால் அவற்றை கைவிடும்படி எம்மை அறிவுறுத்துகிறது.

ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணம்என்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே.

மரணம் உணர்த்தும் நிலையாமைபற்றிய பெரும் உண்மையை  மிக எளிய முறையில் திருமூலர் சொல்கிறார். ஊரார் எல்லோரும் கூடுகிறார்கள்; ஒலி எழுப்பி அழுகிறார்கள்; பழைய பெயரை விட்டுப் பிணம் என்று பெயர் சொல்கிறார்கள். சுடுகாட்டுக்குக் கொண்டுபோய்ச் சுட்டுவிடுகிறார்கள். பிறகு நீரில் மூழ்கிக் குளித்துவிட்டு அந்த நினைப்பும் இல்லாமல் மறந்து விடுகிறார்கள்.

யோகக் கலை பற்றி முழுமையாக திருமூலர் கூறியுள்ளார். அதன் மூலம் அட்டமா சித்தி பெறலாம் என்று சொல்லாமல், எப்படி அதைச் செய்ய முடியும் என்று விபரித்துள்ளார். practice before preaching என்று சொல்வார்கள். திருமூலர் பதஞ்சலி முனிவர்க்கு சமமான யோகி. முக்கியமாக பிரணாஞாபம் மூலம் அட்டமா சித்தி வரப்பெற்று பிறர் நன்மைக்காக அவ்வப்போது செயல் படுத்தியும் உள்ளார்.

இந்துமதம் உயர் மன நிலை அடைய வழி செய்கிறது. இந்து மதத்தை சரியாக பின்பற்றுபவர் தனது விவேகத்திற்கே செயலாற்ற வைக்கிறார்.

நாம் பேசும்போதும் செயலாற்றும் போதும் ஒன்றில் எமது emotions/உணர்வுகள் தொழிற்படுகின்றன அல்லது எமது விவேகம் தொழிற்படுகிறது. உதாரணமாக ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் ஒருவசனம் பேசி முடியமுன்னர் நாம் விளைவு காட்டிப் பேசினால் அங்கு எமது emotions னே பேசுகிறது. பேசிமுடிந்தவுடன் இடைவெளி இல்லாமல் நாம் பேசினாலும் எமது விவேகம் தொழிற்பட நாம் அவகாசம் விடவில்லை. அவர் பேசியதை முழுமையாக கேட்டு ஒரு கணப்பொழுது சிந்தித்து பேசினால் எமது விவேக தொழிற்பாட்டுக்கு இடம் அளிக்கிறோம்.

இந்து மதம் உலக பிணைப்புகளை விட்டு இறைவனுடன் பிணைப்பு ஏற்படுத்தலே சிறந்தது என்கிறது. பிணைப்புகளே emotions ற்கு காரணம். பிணைப்புகளை விடும்போது விவேகத்தின் தொழிற்பாடு உயர்வாக இருக்கும்.

பிணைப்புகளை விடுதல் ஆன்மாவை உணர்தலாகும். பிணைப்புகளை விடுதலுக்கு ஆரம்பம் தன்னை அறிதல்.

யோகக் கலை உள்முகத் தேடலுக்கு ஆற்றுப் படுத்த வல்லது. — meditation என்று சொல்லப்படும் தவத்திற்கும் அது அடிப்படை. உள்முகத் தேடலலேயே தன்னை அறிதல் சாத்தியமாகும். தன்னை அறிதல் ஓர் உயர் மன நிலை.

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை தன்னை அறியாமல் தானே கெடுகின்றான் தன்னை அறியும் அறிவை அறிந்தபின் தன்னை அர்ச்சிக்கத் தான் இருந்தானே

என்று திருமூலரின் திருமந்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

பயிற்சி, முயற்சி, தவம் இவை மூன்றையும் தொடர்ந்து மேற்கொண்டால் மனிதன் மா மனிதனாக மாறலாம். இதற்கு ஒரு வழி தான் யோகக் கலை

நாயன்மார்கள் எம் நல்வாழ்விற்கு வழி காட்டி உள்ளனர். நாயன்மார்களுள் நம் நடத்தைகள் சிறப்பாக அமைய உன்னத அறிவுறுத்தல்கள் தந்த ஞான குருதான் திருமூலர்.
நாமெல்லாம் விளக்கிற்கு கீழ உள்ள வர்களைப்போல. அருகில் இருந்தும் இவற்றின் பெருமையையும், நாம் இவற்றால் மேன்மை அடையலாம் என்பதையும் உணராமல் இருக்கிறோம். ஆனால் பிற நெறிகளை சார்ந்தோர் பலர் இவற்றை அறிந்து பயன் பெற நாடுவதை நாம் காணலாம்.
நற்குவை நாடினால் எம்மை நாம் உணர்வோம் அதனால் மேன்மை அடைவோம்.
ஈசத்துச் சித்தர் யோக சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய கூற்று:

என்னை எனக்கறிவித்தான் எங்கள் குருநாதன்
இணையடி எந்தலைவைத்தான் என்கள்குருநாதன்
அன்னை பிதா குருவென்றான் எங்கள் குருநாதன்
அவனியெல்லாம் ஆளவைத்தான் எங்கள் குருநாதன்
முன்னைவினை நீக்கிவிட்டான் எங்கள் குருநாதன்
மூவர்க்கும் அறியவொண்ணா எங்கள் குருநாதன்
நன்மை தீமை யறியாதான் எங்கள் குருநாதன்
நான் தானாய் விளங்குகின்றான் எங்கள் குருநாதன்.

திருமூலரும் தமது மேல்நிலை அடைவிற்கும், தான் வெளிப்படுத்திய திருமந்திர பாக்களுக்கும் காரணமாகவும் கருவியாகவும் தனது குருவை, குரு பரம்பரையையே போற்றி நிறைகிறார்.

வாழ்கவே வாழ்க வென் நந்தி திருவடி
வாழ்கவே வாழ்க மலமறுத்தான் பாதம்
வாழ்கவே வாழ்க மெய்ஞ்ஞானத்தான் தாள்
வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.