தமிழ்நாட்டிலுள்ள முக்கிய விநாயகர் ஸ்தலங்கள் part 1
இந்து மதத்தின் சிறப்பு என்னவெனில் அது உயர் மனநிலை எய்தலுக்கு மிகச் சிறந்த மார்க்கமாக இருத்தலே.
எம்முள் உள்ள தெய்வீக யோக சக்தியை மேலோங்கச் செய்வது எம்மை கடவுள் நிலையை அண்மிக்கச் செய்வதாகும். விநாயக தத்துவமும் வழிபாடும் இவ்விலக்கிற்கு எம்மை ஆற்றுப் படுத்துகிறது.
எமது முள்ளந்தண்டடியில் ஒரு அளப்பரிய சக்தி உண்டு. மூலாதார சக்தி என இது குறிப்பிடப்படுகிறது. இந்த சக்தி நெருப்பை ஒத்தது. சிறிது சிறிதாக அது மேலெழுகின்றது. மனக்குவிப்புத் தியானம் மூலம் இச்செயலை சீராக்கலாம். மூளையின் உச்சிவரை மூலாதார சக்தி மேலெழும் செயலை மூலாதாரச் சக்கரம் என்கின்றோம். விநாயகர் வழிபாடு மூலாதாரச் சக்கரத்துடன் தொடர்புடையது. இதன் உச்ச நிலையில் மனிதன் முக்காலமும் அறியக்கூடிய மாமுனிவன் ஆகின்றான்.
எமது சமய கலாசாரத்தில் தோன்றிய வியாசர், பதஞ்சலி முனிவர், திருமூலர் தொடக்கம் சகல நாயன்மார்களும் மட்டுமல்லாமல், பிற மதங்களைச் சார்ந்த மகாவீரர், சௌராஷ்டிரர், புத்தர், ஏசுபிரான், நபிகள் நாயகம் யாவரும் இந்நிலையை அடைந்தவரே. மூலாதார எழுச்சியின் இவ்வியல்பினால் கணபதி வழிபாட்டை அடிப்படையாகக் கொண்ட ‘காணாபத்தியம்’ என்ற சமயப் பிரிவும் உண்டு.
பிள்ளையாரின் நிரந்தர வாசஸ்தலம் முள்ளந்தண்டு முனையிலுள்ள மூலாதாரமே. அதனை முன்னிறுத்துவதுதான் ‘ஓம்’ என்ற மந்திரம். எந்த தெய்வ நாமத்தின் முன்பும் ஓம் சேர்க்கப் படும்போது அது மந்திரமாகிறது. அதாவது எம்மை உயர் நிலைக்கு இட்டுச் செல்லும், மிகுந்த பய பக்தியுடன் நாம் செய்யும் உச்சரிப்பு. எனவே சகல தெய்வ வழிபாட்டின் மூலாதாரம் பிள்ளையார் என்பதை இதன் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.
எந்த தெய்வீக நாமத்தின் முன்பும் ஓம் ஓதுவதுபோல பிள்ளையார் விளங்குவதாலேயே வி-நாயகர் தமக்கு மேல் நாயகர் இல்லாதவர் என்ற பெயர் பெறுகிறார்.
மூலாதாரச் சக்தியினால் எம்மைப் பலப்படுத்தி அதன் மூலம் எமக்கு வரும் சவால்களை சந்திக்கும் ஆற்றல் கிடைக்கச் செய்வதால் அவரை விக்கினம் நீக்குபவர்; விக்கினேஸ்வரர் என்றழைக்கிறோம்.
பிள்ளை யார்? யாருடைய மகன்? சகோதரன்? மருகன்? என்று மட்டும் சொன்னால் போதாது, நாம் என்ன உடலா?, மனமா? புத்தியா? அல்லது அதற்கும் மேலானதா? என்ற விசாரணைக்கு வழி செய்வதால், பிள்ளையார் என்ற பெயர் வருகிறது.
இத்தகைய சிறப்புடைய பிள்ளையாரின் வழிபாட்டை நிலைப்படுத்தும் தமிழ் நாட்டிலுள்ள முக்கிய ஸ்தலங்களைப் பார்ப்போம்.
இங்கு ஸ்தலங்கள் என்று சொல்லி தொன்மை வாய்ந்த சில கோவில்களே தெரியப்பட்டு தகவல்கள் வெளிக் கொணரப்படுகின்றன. மற்றும்படி விநாயகர் கோவில்கள் முலைக்கு முலை நாம் காணலாம். T ‘ரி’ வடிவ தெரு முகப்பில் ஒரு வீடு இருந்தால் T காலுக்கு எதிரே சுவரில் பிள்ளையார் படமுள்ள மதிற்கற்கள் நாடெங்கும் தென்படும். பல இடங்களில் சிறிய சுவர்ப் பொந்தினுள் சிறு பிள்ளையார் விக்ரகம் வைக்கப்பட்டு பூசையும் நடை பெறுவதுண்டு.
இந்தியா வரும் எந்த சுற்றுலாப் பயணிக்கும் பிள்ளையார் கோவில் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது திருச்சி உச்சிப் பிள்ளையாரே.
திருச்சியில் இரண்டு மையங்கள் உள்ளன. ஒன்று திருச்சி புகையிரத நிலையம் அமைந்துள்ள திருச்சி ஜங்க்ஷன் (JUNCTION), மற்றது சத்திரம் பேருந்து நிலையம். உச்சிப் பிள்ளையார் கோவில் சத்திரம் பகுதியில் அமைந்துள்ள மலை உச்சியில் காணப் படுகிறது. உச்சிக்கு ஏறும் வழியிலேயே மலையில் குடைந்த தாயுமானவர் சிவன் கோவிலுமுண்டு.
இராவணனின் தம்பி விபீஷணனின் நட்பையும் உதவியையும் பாராட்டி இராமன் அவருக்கு அனந்த சயன ஸ்ரீ ரங்கநாத சுவாமி விக்கிரகம் ஒன்றை பரிசாக அளித்தார்; அது வைக்கப்படுமிடத்தில் நிலைபெறும் என்ற அறிவுறுத்தலுடன். விபீஷணன் அதனைக் கொண்டுபோகும் வழியில் சந்தியாவதனம் செய்ய விரும்பினான். அப்பொழுது பிள்ளையார் ஒரு மாடுமேய்க்கும் சிறுவன் உருவில் அங்கு தோன்றவே, விபீஷணன் சிறுவனிடம் தான் ஆற்றில் சேமமாகி வரும் வரையில் அவ்விக்கிரகத்தை வைதிருப்பாயா? எனக் கேட்டான். சிறுவனும் ஒத்துக்கொள்ளவே விபீஷணன் விக்ரகத்தை அவனிடம் கொடுத்துவிட்டு ஆற்றில் நீராடப் போனான். சிறுவனோ விக்கிரகத்தை நிலத்தில் வைத்துவிட்டு நின்றான். திரும்பி வந்த விபீஷணன் சிறுவனிடம் விக்கிரகம் எங்கே எனக்கேட்க அவனும் நிலத்திலிருந்த ரங்காநாதப் பெருமாள் சிலையைக் காட்டினான். விபீஷணனால் எவ்வளவு முயன்றும் அதனைப் பெயர்க்க முடியவில்லை. (இன்று அதுவே ஸ்ரீரங்கம் கோவில்) கோபங்கொண்ட விபீஷணன் சிறுவனை அடிக்க கையை ஓங்கவே அவன் தப்பி ஓடினான். விபீஷணன் அவனைத் துரத்தவே சிறுவன் அருகில் இருந்த மலையில் ஏறலானான். உச்சிக்குப் போனதும் விபீஷணன் சிறுவனைப் பிடித்து அவனைக் கொட்ட கையை ஓங்கவே சிறுவன் பிள்ளையாராக மாறி விபீஷணனுக்கு அருட்காட்சி கொடுத்தார். அந்த இடத்தில் பிள்ளையாரும் நிலை கொண்டார். அதுவே இன்று நாம் காணும் உச்சிப் பிள்ளையார். இதுவும் கீழே அமைந்துள்ள தாயுமானவர் கோவிலும் பின்னர் சோழ அரசர்களால் கோயில்களாக செதுக்கப்பட்டன.
திருச்சியில் உள்ள பிற கோவில்கள்: ஸ்ரீ ரங்கம் பெருமாள் கோவில், திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் சிவன் கோவில் இரண்டும் நகரப் பகுதிக்குள் அமைந்துள்ளன. உறையூர் வெக்காளி அம்மன், சமயபுரம் மாரி அம்மன் கோவில், வயலூர் முருகன் ஆலயம் மூன்றும் நகருக்கு வெளியே.
அடுத்து பிரபல்யத்தில் எள்ளளவும் குறைவில்லாத பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் கோவிலாகும்.
பிள்ளையார் பட்டி சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூருக்கும் குன்றக்குடிக்கும் இடையில் அமைந்துள்ளது. ஓரளவு தூரத்தில், வடகிழக்கில் தஞ்சாவூரும் தென்மேற்கில் மதுரை மாநகரும் உண்டு.
இக்கோவில் ஏக்கத்தூர் கூன் பெரும்பாரணன் என்னும் சிற்பியால் மலைக் குகையை குடைந்து உருவாக்கப்பட்டது. கல்லைக் குடைந்து பொழியப்பட்ட 14 (சிலை) விக்கிரகங்கள் இங்கு உண்டு. கால இடைவெளி விட்டு பின்வந்த சிற்பிகளாலும் செதுக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டதால் பிள்ளையார் பட்டி ஊரின் பழைய பெயர்களான, எக்கத்தூர், திருவீங்கைக்குடி, மருதங்குடி, ராஜ நாராயணபுரம் என்ற பெயர்களை இங்குள்ள கற்சிலைகளில் காணலாம். பாண்டிய மன்னரின் ஆதரவில் உருவான இக்கோயில் 2500 ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்தது. நகரத்தார் எனப்படும் செட்டிமார் இக்கோவிலை சுத்தமாகப் பேணி வந்துள்ளனர்.
- இங்குள்ள பிள்ளையார் விக்கிரகம் 6 அடி உயரமானது. விசேடமாக பிள்ளையாரின் துதிக்கை வலது பக்கம் திரும்பி இருப்பதால் அவர் வலம்புரி விநாயகர் என்றும் அழைக்கப் படுகிறார். இக்கற்பக விநாயகர் வடக்குத் திசை நோக்கியவாறு வீற்றிருக்கிறார்.
- பரிவார மூர்த்திகளாக திருமணங்களைக் கைகூடச்செய்யும் கார்த்தியாயினி அம்மனும், பிள்ளை வரம் அளிக்கும் நாக லிங்கமும், செல்வத்தை அள்ளிச் சொரியும் பசுபதீஸ்வரரும் விசேடமாக உண்டு.
- விநாயகர் சதுர்த்தி இங்கு விசேடமான திருவிழாவாகும். 10 நாட்கள் இது நீடிக்கும். சதுர்த்திக்கு 9 நாட்களுக்கு முன்னர் காப்புக்கட்டி கொடி ஏற்றத்திருவிழா இடம் பெறும். 9 ஆவது நாள் தேர்த்திருவிழாவைத் தொடர்ந்து பிள்ளையாருக்கு சந்தனக் காப்பு சார்த்துதல் விசேடமாகும்.
- 12 மாதங்களும் சதுர்த்தி விரதம் அனுட்டிப்போர் ஆவணிச் சதுர்த்திக்கு –இக்கோவிலுக்கு வருவர்.
பிள்ளையார் பட்டியைச் சுற்றியுள்ள வேறு கோவில்கள்:
- குன்றக்குடி முருகன் ஆலயம் 3 km தூரத்தில்.
- தென் திருப்பதி 5km தூரத்தில்.
- வைரவர் கோவில் 2km தூரத்தில்.
- திருத்தளிநாதர் கோவில்- யோக வைரவர் கோவில்- இவரே ஏனைய வைரவர்களுக்கு மூல வைரவர்.
- திருப்பத்தூர் பஸ் நிலையம் அருகில் (12km)