வதிரி பீடம் – VATHIRI PEEDAM
இலயிப்பது பொ.சிவப்பிரகாசம் P.H.I.
வதிரி பீடம் – தல வரலாறு
‘வதிரி பீடம்’ என்பதில் ‘வதிரி’ என்பது இலங்கை யாழ்ப்பாணம் கொழும்புத்துறை மேற்கில் கோவில் கொண்டு எழுந்தருளி இருக்கும் விநாயகப் பெருமானுக்கான தல விருட்சத்தைக் குறிக்கும். வதிரி என்றால் இலந்தை எனப் பொருள்படும். வதிரி நகரில் வீற்றிருப்பதால், இந்த விநாயகர் ‘ஸ்ரீ வதிரிபீட மன்றுள் ஆடும் விநாயகப் பெருமான்’ எனப் பெயர் பெற்றார். பாமர மக்கள் இன்றும் இலந்தைக்குளப் பிள்ளையார் என்றே சுலபமாகக் கைகூப்புவர். வடமொழியாளர் வதிரிபீடம் என்றே சொல்லுவர். முற்காலத்தில் இலந்தை மரங்கள் உள்ளும் புறமும் நிறையக் காணப் பெற்றதால், இலந்தைக்குளப் பிள்ளையார் என்றனர். இவ்வாலயப் பகுதி தவத்திரு சிவயோக சுவாமிகள் வாழ்ந்த பதி.
புதுக்கோட்டை மாவட்டத்தில், திருப்புவனவாயில் என்னும் பெருந்தலத்தில், கோவில் கொண்டு எழுந்தருளி இருக்கும், பழம்பதி நாதராகிய (விருத்த புரீர்ஸ்வரர்) சிவபெருமானை தரிசித்த ஸ்ரீ இராமபிரான், இலங்கேஸ்வரனை வெற்றிக்காண வல்லமைதரவேண்டி அருள் ஆசிபெற்ற பின், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியும், இளைய பெருமாளாகிய இலக்குவனும் கடற்கரை ஓரமாக கிழக்கு நோக்கி எழுந்தருளி இருக்கும் மகா கணபதியை தரிசிக்கிறார்கள். பிரணவத்தின் முழுவடிவாக காட்சிதரும் கணபதியை, அந்த மூலாதாரப் பெருமானை சீதையை சிறைமீட்க இலங்கை செல்லுமுன் ஸ்ரீ சக்கரவர்த்தித் திருமகன் செல்லும் காரியம் கைகூட வழிபட்டான். கணபதி வழிபாட்டின் மூலம் கருமம் கைகூட்டும், தேடிச் செல்லும் பெருநிதி பெருக்கும், எடுக்கும் பெரும் பணி வெற்றிகரமாக அமையும்.
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொற்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் – உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானை
காதலால் கூப்புவர் தம் கை
வதிரி பீடம், அதில் கோவில் கொண்டு எழுந்தருளி இருக்கும் விநாயகப் பெருமான், தமிழ்நாடு வேதாரண்யத்தில் வீற்றிருக்கும் நடராஜப் பெருமானைத் தந்தையாகவும், விநாயகமூர்த்திப் பிள்ளையார் என்ற பெயரைத் தனதாகவுங் கொண்டவர். யாழ்ப்பாணம் கச்சேரியில் உள்ள தோம்புகளில் “செட்டி வேதாரண்யம் மன்றுளாடும் பெருமான் விநாயகமூர்த்திப் பிள்ளையார்” என்றே பதியப் பட்டுள்ளது.
கூழங்கைச் சக்கரவர்த்தி
ஒரு கை முடமாகையால் இவன் கூழங்கைச் சக்கரவர்த்தி எனப்பட்டான். இவனை விசய கூழங்கைச் சக்கரவர்த்தி என்றுங் கூறுவர். இவன் கி.பி. 1210ல் யாழ்ப்பாணத்தை நல்லூரில் இருந்து ஆட்சி செய்தவன்.
கச்சேரித் தோம்புகளின்படியும் கர்ணபரம்பரையாகவும் அறியக்கிடப்பது என்னவெனில் கூழங்கைச் சக்கரவர்த்தியானவன் தென்மதுரையிலுள்ள திருமருங்கூர் கிராமத்திலிருந்து, வேலுச் செட்டியார், கந்தச் செட்டியார், கதிர்காமச் செட்டியார், கயிலைச் செட்டியார், ஐயம்பிள்ளைச் செட்டியார் என்பவர்களை குடும்பம் குடும்பமாக தருவித்தான். இவர்களை கடல் வழியாக தோணியில் ஏற்றி, மன்னாரிலுள்ள விடத்தல்தீவுத் துறைமுகத்தில் இறக்கி, பூநகரி வழியாக, மீண்டும் தோணிமூலம் கொழும்புத்துறையில் மேலேகூறிய முதல் மூன்று குடும்பங்களையும் குடியிருத்தினான். அடுத்த இரு குடும்பங்களையும் நல்லூரில் குடியமர்த்தினான். இவர்களின் வழித்தோன்றல்களே கொழும்புத்துறையிலும், நல்லூரிலும் வாழும் சைவப் பெருமக்களாகும்.
இவர்களின் முன்னோரே கொழும்புத்துறையில் ஆதியில் வட்டக்குடில் அமைத்து, பனை ஓலையால் வேய்ந்து, மூல மூர்த்தியாகிய விநாயகப் பெருமானை, முறைப்படி பிரதிஷ்டை செய்து, யந்திரம், மந்திரம், தந்திரம், முத்திரைகள் என்பவற்றால் தாபனம் செய்து, மக்கள் வழிபட வழிவகுத்தனர். கி.பி. 1620ல் யாழ்ப்பாணத்தில் கால் பதித்த, பரதேசிகளான போர்த்துக்கேயத் தளபதி பிலிப்புடி ஒல்வியாரா என்ற பறங்கியையும், அவனது படையினரையும், இற்றைக்கு 350 வருடங்களுக்கு முன் நல்லூரில் இருந்து, ஆட்சி செய்த அரச குமாரன் எதிர்மனசிங்கன் என்பான் எதிர்த்துப் போர் செய்தான்.
போரின்போது இந்த வதிரி பீடம் கோயிலின் முன்றலில் வைத்தே அரசகுமாரன் சிரச்சேதம் செய்யப்பட்டான். அவ்வேளையில் இந்தக்கோயில் குருக்களும், வாளேந்திப் போர்செய்து, அரசகுமாரனுடன் வீரமரணம் எய்திய காட்சியை, இந்தக் கோவிலின் இராஜகோபுரத் தென்பகுதியில் மிக ஆழகாக சீர்காழிச் சிற்பிகள் வடிவமைத்துள்ளார்கள்.
*****************************************************************************p1
ஆலயத் திருப்பணி
வேத மந்திரங்களின் நாதமே
அகமுகமாக்க வல்லது –வேத
மந்திரங்கள் ஒலிக்கின்ற இடங்களில்
தீய சக்திகள் விலகுகின்றன. மங்கல
தேவதையாகிய மகா இலட்சுமி
நித்திய வாசம் செய்வாள்
–உபநிஷதம்
ஏவிளம்பி வருடம் 1897ம் ஆண்டு வெள்ளை வையிரக் கற்களைப் பொளிந்து, வதிரி பீட மூலாலயத்திற்கான கருவறையும் அதற்குமேல் தூபி கூடிய ஆலயமும் அர்த்த மண்டபம், மகாமண்டபம் யாவும் நிறைவுபெற்றத்தை, தெற்கு வாசற்சுவரிலுள்ள கல்வெட்டுமூலம்அறிய முடிகிறது.
பஞ்சமுக விநாயகர் கொலுவீற்றிருக்கும் மண்டபம் மூடுபாகையாக கற்றூண்களைக் கொண்டுள்ளது. மூலாலயத்தில் வீற்றிருந்த சிவலிங்கப் பெருமானுக்கு, சில வருடங்களுக்குமுன் வெளிமண்டபத்தில் தூபியுடன் கூடிய ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. சிவகாமி சமேத சிதம்பர நடராஜப் பெருமானுக்கு, மணிவாசகருடன் கூடிய தெற்கு நோக்கிய சபையில் இனித்தமுடைய எடுத்த பொற்பாதத்துடன் காணலாம். வையிரவ சுவாமி தனிக்கோயிலும், நவக்கிரக மண்டபம், சந்தான கோபாலர், சண்டேசுரர், மணிக்கோபுரம், வசந்த மண்டபம், யாகசாலை, பாகசாலை, களஞ்சியம் யாவும் அகண்ட பிரகாரங்களில் காணமுடியும். ஆலயத் தூண்களில் விநாயகரின் நடனச் சிற்பங்கள். இராஜகோபுரம் அதன்கீழ் மணிமண்டபம் மிக அழகான வேலைப்பாடு. வெளிப்புறத்தில் மிகப் பெரிய விநாயகப் பெருமான் காட்சி தருகிறார். இதேபோல் தெற்குவாசலிலும் சிறிய அழகான மணிமண்டபம் சிற்ப வேலைப்பாடு மிக்கது.
வதிரிபீட விநாயகர் முகப்புத் தோற்றம்
சுவர்களில் ஓவியங்கள், மகேஸ்வர பூசைக்கான மண்டபம், போதிய குழாய் நீர் வினியோகம், தீர்த்தக்கிணறு, கொடித்தம்பப் பிள்ளையார், சமய குரவர் ஓவியம் அதன் கீழ் கண்ணாடிப் பேழையில், சதுர்வேதங்கள், பன்னிரு திருமுறைகள், தேவார திருவாசக நூல்கள், உபநிஷங்கள் எட்டு, பாடல் பெற்ற திருத்தல நூல்கள் உபகரிக்கப்பட்டுள்ளன. நித்திய பூசைகள், மகா சிவராத்திரி, நடேசர் அபிஷேகங்கள், மாதாந்தச் சதுர்த்தி, பிள்ளையார் காதை, நவராத்திரி, சோமவாரம், திருவெம்பாவை அனுட்டானம் நிறைவாக நடைபெறுகிறது. வைகாசி விசாகத்தை தீர்த்தோற்சவமாகக் கொண்டு பத்துநாள் மகோற்சவம் நடைபெறுகிறது. பெருஞ்சாந்திவிழா விரைவில் இடம்பெறவுள்ளது.
திராவிட மரபுத்தேர்
பஞ்சமுக விநாயகப் பெருமானுக்குரிய, திராவிட மரபு முக பத்திர எண்கோண சிற்பத்தேர், இதற்கான தேர்முட்டி என்பன மிகவும் அழகாகவும், சிறப்பாகவும், காத்திரமாகவும் உருவாக்கம் பெற்றது அண்மைக்கால நிகழ்வே! இந்தச் சிற்பத்தேரில் ஆலய சரித்திர வரலாறு, யாழ்ப்பாண சித்தர் பரம்பரை, விநாயக புராணக் காட்சிகள், விக்கிரக வரி ஆகியன தேரை அலங்கரிக்கின்றன. அழகிய சிம்மாசனம், யாழிகள், நால் வேதங்களான நான்கு கம்பீரக் குதிரைகள், யாவும் சிற்பத்தேருக்கு மெருகூட்டுகின்றன. தேரோடும் வீதிகள் யாவும், கல்பரப்பி சிறப்புற அமையப்பெற்றுள்ளது. சப்பரம், அதற்கான தரிப்பிடம், தோற்றமான இடப வாகனம் யாவும் விநாயகப் பெருமானுக்கு அமைந்துள்ளது திருவருள் என்றே கூறவேண்டும்.
பழனிச் செவ்வேள்
1890ல் கொழும்புத்துறை மேற்கில் கல்விச் செல்வம், சைவ ஒழுக்கம், என்பவற்றில் சிறந்து விளங்கிய திரு. தில்லையம்பலம் குமாரசாமிச் செட்டியார் (கணக்கர்) என்பவர் தனக்கு மகப்பேறு இன்மையால், தமிழ்நாடு தலயாத்திரை மேற்கொண்டு, பழநியில் தங்கி இருந்தார். அப்போது பழநி முருகன் அவரது கனவில் சிறுவனாயத் தோன்றி, “இந்தப் பிறவியில் உனக்கு மகப் பேறு இல்லை. ஆகையால் நீ என்னைப் பிள்ளையாக ஏற்று பரிபாலிப்பாயாக!” என்று கூறி மறைந்தருளினார். அந்தக் கனவின் பயனாக கணக்கர் அவர்கள் பழநியில் சில காலம் தங்கி இருந்து, தகுந்த சிற்பியைக் கொண்டு தென்பழநி முருகனைப்போல், ஒரு விக்கிரகம் செதுக்கி, யாழ்ப்பாணம் கொண்டு வந்து வதிரி பீடம் வளாகத்தின் வடமேல் திசையில், ஆலயம் அமைத்து, பெருஞ்சாந்தி செய்து, வழிபட்டு வந்தார். தான்தேடிய செல்வம், நிலபுலம் யாவற்றையும் இந்தப் பழநி முருகனுக்கே சாதனஞ் செய்தார். தென்பழநி ஆண்டவர் விக்கிரகம் நவபாஷணத்தால் ஆனது. அதன் பிம்பமாக கருங்கல்லால் மிக அழகாக அமைந்தது ஸ்ரீ பழநி ஆண்டவர் விக்கிரகம். முத்துக்குமாரர் வீற்றிருக்கும் தூபி அமரர் தியாகராஜா ஐயர் உபயம். தற்போது பழநிக்கான வசந்த மண்டபம் பிரம்மஸ்ரீ கணநாத சர்மா உபயம்.
இப்பழநி ஆண்டவர் கோவில் வதிரி பீடத்திலே விநாயகர் அமர்ந்த அதே வளாகத்திலுள்ள நித்திய, நைமித்திய கர்ம செயல்பாடுகள் கொண்ட இரண்டாவது கோவிலாக திகழ்கிறது.
டாக்டர் ஊ.வே. சாமிநாதஐயர்.
ஏட்டுத் தமிழை மீட்டுத் தந்து அச்சு வாகனம் ஏற்றி, நூலுருவில் எமக்குத் தந்தவர் டாக்டர் ஊ.வே. சாமிநாத ஐயரவர்கள். குமாரசாமிச் செட்டியார் ஐயரவர்களின் ஒரே காலத்தவர் மட்டுமல்லாமல் அவரின் அந்தியந்த நண்பரும்கூட. கணக்கர் அவர்களின் வேண்டுதலின்பேரில் அவர் தாபித்த பழநி முருகன்மீது ஊஞ்சல் பாவை அழகு தமிழில் இனிமையாகத் தந்துள்ளார். “குயில்வாழ் பொழிவிலந்தைக் கோநகர் வாழ் செவ்வேள்” என ஆரம்பிக்கிறது ஊஞ்சல்பா.
பழநி முருகனுக்கு அலங்கார உற்சவம் பத்து நாட்களுக்கு இடம்பெறும். கந்தசஷ்டி அனுட்டானம் ஆறுநாளும் இலந்தை நகர் வாழ் சைவ மக்கள் பக்தி சிரத்தையோடு விரதமிருப்பர். ஆலயமருங்கில் நிழல்தரு மரங்கள் நாட்டப் பட்டுள்ளன. இந்த முருகனின் திருமுன்சுவரில் பிரணவ மந்திரம் பழம் நீ சிலைகளைக் காணலாம். இந்த ஆலயத்தை நிர்வகிக்க ஒரு சீரான அமைப்புத் அவசியம்.
***********************************************************************************p2
வதிரிபீட வரலாறை ஆய்ந்து தொகுக்கும்போது இலந்தை நகரோடு தொடர்பான விடயங்களை சேர்த்தல் தவிர்க்க முடியாதது.
கடையிற் சுவாமிகள்.
பெங்களூர் உயர்நீதிமன்ற நீதியரசராக இருந்தவரும், முத்தியானந்தா என்ற தீட்சைப் பெயர் கொண்டவரும், தான் வகித்த பெரும் பதவியில் ஒரு குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியதால், மனமுடைந்து பெரும் கவலையுடன் பதவியைத் துறந்தார். தூக்குத்தண்டனை அளிப்பதற்கு தான் யார் என்ற உள விசாரணையுடன் குரு ஒருவருடன் இணைந்து ஆன்மீக வாழ்வை மேற்கொண்டார். வைரமுத்துச் செட்டியாரென்ற வணிகர் (இவரும் ஒருவகையில் சித்தரே) இவரை 1862ல் இலங்கைக்கு அழைத்து வந்தார். ஊர்காவத்துறை, மண்டைதீவு இடங்களில் தங்கி இருந்து இறுதி நாட்களில் யாழ்ப்பாணம் வந்து பெரிய கடைத்தெருவில் அதிகமாக சஞ்சாரம் செய்ததனால், கடையிற் சுவாமிகள் எனப்பட்டார். கடையிற் சுவாமிகளால் யாழ்ப்பாணத்தில் ஒரு ஞானபரம்பரை தோன்றியதெனலாம். அவருக்கு சீடர்களாக அமைந்தவர்களுள் குறிப்பிடக் கூடியவர்கள் குழந்தைவேலுச்சுவாமிகள், வைரமுத்துச் செட்டியார், சின்னச் சுவாமி, நன்னியர், சடைவரதர், செல்லப்பாச்சுவாமி.
கடையிற்சுவாமிகள் ஒருமுறை நல்லூர் தேரடிக்கு வந்தபோது, அந்தப் பெருவீதியில் வைத்து, ஒரு எலுமிச்சம் பழத்தை, மிக்கவும்பயபக்தியோடு செல்லப்பா சுவாமிகள் (ஞானபரம்பரையில் அடுத்ததாக வருபவர்) கொடுக்க, அதை கடையிற்சுவாமிகள் அன்போடு ஏற்றார். பிறிதொருகால், செல்லப்பரை கடையிற் சுவாமிகள் நல்லூரில் சந்தித்தபோது, கடையிற்சுவாமிகள் ஒரு கடலைக்காரியிடம் ஒரு வெள்ளி ரூபாயைப் பெற்று, வெற்றிலையில் மடித்து செல்லப்பாசுவாமிகளிடம் கொடுத்து, அவரது தலையில் தன் குடையை வைத்து ஆசீர்வத்தித்தார். இதுவே செல்லப்பரின் தீட்சையாக அமைந்து, அவரும் ஞானோதயம் பெற்றதென்பது ஐதீகம். செல்லப்பர் நல்லூர்த் தேரடியை தன் வாசமாகக் கொண்டார்.
நல்லூரை நனைத்த ஞானவெள்ளம்
செல்லப்பர் இளவயதில் கல்வி கற்று, அரச சேவையில் அமர்ந்தாலும், அதில் மனம் நாட்டங்கொள்ளாது, ஞானப் பெருக்கால், நல்லூரான் திருவருளில் நாளும் நனைந்து, பக்குவமுள்ள சீடனை நாளும் எதிர்பார்த்திருந்தார். மாவிட்டபுரத்தில் 1872ல் அவதரித்த சதாசிவம் என்ற இயற்பெயர் கொண்ட யோகநாதனுக்கே இந்த அருகதை இருந்தது. இவர் படித்து, கிளிநொச்சியில் அரச திணைக்களத்தில் வேலை புரிந்தும் மனம் ஒரு நிலையின்றியே இருந்துள்ளார்.
இதற்கிடையில் கொழும்புத்துறையில் விதானையராக இருந்த திருஞானசம்பந்தரும் இன்னும் சிலரும் தினமும் செல்லப்பா சுவாமிகளைக் காண்பதற்காகவே நல்லூர் சென்று வரலாயினர். தேடலுடன் நல்லூர் செல்லும் யோகநாதரும் இவர்கள் மூலம் செல்லப்பரைப் பற்றி கேள்வியுற்றிருந்தாலும் அவரை காணும் பேறு பின்னரே கிடைத்தது. அந்தப் பேறின் விளைவாக செல்லப்பரின் திருவடிக்கோவில் வதிரி பீடம் பூங்கொல்லையில் மிக அண்மையில் உருவாக்கம் பெற்றுள்ளது.
சிவயோகசுவாமிகள்
நாவலர் பெருமான் (ஸ்ரீல ஸ்ரீ ஆறுமுகநாவலர்) தோன்றிய நல்லூர் கொழும்புத்துறையுடன் தெய்வீகத் தொடர்புடையது. ஞான நாட்டங்கொண்ட யோகநாதன், செல்லப்பா சுவாமிகளை நல்லூர்த் தேரடியில் தரிசிக்கும் கணம் உண்டானதும் அவருக்கு மணிவாசகர் திருப் பெருந்துறையில் ஞானாசிரியரைக் கண்டது போன்ற நிலையே எனலாம்.
‘கருத்தில் நினைந்து உருகிக் கைகூப்பும் தொண்டர்
வருத்தமெல்லாம் தீர்க்கும் வடிவேல் திருத்தலத்தில்
தேரடியில் தேசிகனைக் கண்டு தரிசித்தேன்
ஆரடா நீ என்றான் அவன்’ – (நற்சிந்தனைப் பாடல்)
என்று பின்னாளில் யோகர் குறிப்பிடுவார்.
முதன் முதலில் செல்லப்பா சுவாமிகளைக் கண்ட யோகநாதர் மலைத்து நின்றார். அவரை கருணையோடு நோக்கிய செல்லப்பர் “உன்னைத்தான் எதிர்பார்த்திருந்தேன் வா, வா’ என்றழைத்தாலும், ‘யாரடா நீ?’ என்று கர்ஜித்து உலுப்பியுள்ளார். அவர் வழங்கியதோ அருள் கலந்த பார்வையும் புதிரான வினாக்களும் கூற்றுக்களும்தான். நல்லூரில் செல்லப்பரிடம் ஞானம் பெற்று யோகசுவாமியாகிய யோகநாதர் நிலை கொண்டதோ கொழும்புத்துறைப் புண்ணிய பதியில் வதிரி பீடம் முன்றலில்!
செல்லப்பா சுவாமியிடம் ஞானம் பெற்ற நிகழ்வை சுவாமிகள் வருமாறு தனது நற்சிந்தனைப் பாடலில் குறிப்பிடுகிறார்:
ஒன்றோ விரண்டோ வொருமூன்றோ வென்றவரும்
அன்றுதொட்டின்றுவரை யாராய – ஒன்றுக்கும்
எட்டாமல் நின்றா னெழிற்குருவாய் நல்லூரில்
பட்டமளித் தானெனக்குப்பார்
கொழும்புத்துறை முச்சந்தியில் ஓர் இலுப்பை மரம். வேர்விட்டு விழுதாய் குந்தியிருக்க வசதியாய் இருந்தது. இந்த வேரில் குந்தி எம் குருநாதன் நடுநிசியில் திருநாவுக்கரச சுவாமிகளின் திருத்தாண்டகத்தை விரும்பி உரத்த குரலில் பண்ணோடு பாடுவார். யோக நிலையில் பல நாட்கள் ஏகாந்தமாய் அமர்ந்திருந்தார்.
இலுப்பைமர அருகில் இருந்தது பூநகரி வல்லிபுர உடையார் என்னும் தொண்டரின் வளவு. அப்புண்ணியவானும் அவரது சகோதரி தங்கம்மாவும் 1914ம் ஆண்டு தொடக்கம் தமது வளவில் ஓலையால் வேய்ந்த வொருகுடிசையில் சுவாமியாரை அமர வைத்தனர். அதுவே சுவாமிகள் நிலை கொண்ட இடமாயிற்று.
இவர்களைத் தொடர்ந்து தங்கம்மாவின் மகன் திருநாவுக்கரசும் அவருடன் சேர்ந்த மனைவி பரிமளரத்தினமும் அவர்களது பிள்ளைகளும் சுவாமிகள் 23-3-1964 ஆயிலிய நட்சத்திரத்தில் சமாதி அடையும்வரை பணிவிடை செய்தார்கள். சுவாமியின் பூத உடலும் கொழும்புத்துறையிலேயே துண்டி மயானத்தில் அவர் விரும்பியதற்கிணங்க தகனம் செய்யப் பட்டது. இன்று யோகசுவாமியின் அஸ்தியை வைத்து அவர் எழுந்தருளியிருந்த இடத்தில் கட்டிய சமாதிக் கோயிலில் காலை மாலைப் பூசைகளும் ஆயிலிய நட்சத்திரத்தில் விசேட பூசையும் நடைபெற்று வருகின்றன. வதிரிபீட பிள்ளையார் கோவில் அர்ச்சகரே சமாதிக் கோயிலில் பூசை செய்து வருகிறார். வதிரிபீடக் காணியுள் உள்ள இந்துமகா வித்தியாலய மாணவர்கள் ஆயிலிய நட்சத்திர நாட்களில் பூசையில் கலந்து கொள்வர்.
அந்நாட்களில் வெண்ணிலவைப்போல் திகழ்ந்த வியப்புமிகு குஞ்சியும், வெண்ணீறு தரித்த அகன்ற நெற்றியும் வெண்தாடியும் வெள்ளை வேட்டியும், தாழம்பூ நறுமணமும், கண்ணியமாய் கால் மடித்தும், சிந்தை ஒடுங்கிய தியான நிலையில் அந்தமில்லா யோகத்தில் வதிரிபீடம் அருகே அமர்ந்திருந்த காட்சியை காண கண்கள் போதாது. சுவாமிகள் முன் நறும்புகையும், மணம் மிக்க மலர்களும், குறைவில்லாமல் அருஞ்சுவைக் கனிகளும் நிறைந்திருக்கும்.
கல்வியும் பண்பாடும் சீரும் சிறப்பு மிகவும், ஞானமும் பக்தியும் நிறைந்த மக்கள் வாழும் கொழும்புத்துறையில், விநாயகப் பெருமான் அருகே சிவயோக சுவாமிகளாக, ஞானச்சுடராய், நந்தா விளக்காய், நலஞ்சுடர் குருவாய் வாழ்ந்த குருநாதன், எமக்கு நற்சிந்தனை தந்தார். சிவதொண்டன் நிலையங்களை வண்ணார் பண்ணையிலும், செங்கலடியிலும் நாட்டினார். அவரது தூல சரீரம் மறைந்தாலும் சமாதிக் கோயில் என்றும் அவரை எம்கண்முன் கொண்டுவரும்.
யோகசுவாமிகள்சமாதிக்கோயில்**இந்து மகாவித்தியாலயம்******* வதிரிபீட விநாயகர் முகப்பு
சைவ வித்தியாசாலை
நாவலர் பெருமானது ஊக்கத்தினாலும் ஏவுதலாலும், கவரப்பெற்ற உயர்திரு சிவகுருநாதபிள்ளை அவர்கள் வதிரிபீட விநாயகரின் காணியில் 1874ம் ஆண்டு கொழும்புத்துறை சைவ வித்தியாசாலையை தாபிதம் செய்தார். அச்சைவ வித்தியாசாலை ஆல்போல் தழைத்து, அருகுபோல் வேரூன்றி, இன்று அரசினர் பாடசாலையாக, இந்துமகா வித்தியாலயமாக, பெருவிருட்சமாக வளர்ந்து நிற்பதுடன் சைவம் என்னும் செஞ்சாலி வளர்ந்து வருகிறது.
சுவாமி விவேகானந்தர் வருகை
“இல்லை என்றொருபோதும் சொல்லாதே! ‘என்னால் இயலாதென்று’ ஒருநாளும் நினையாதே! ஏனெனில் நீ வரம்பிலா வலிமை பெற்றவன். காலமும் இடமும் கூட உனக்கு ஒரு பொருட்டல்ல! நீ எதையும், எல்லாவற்றையும் சாதிக்கக் கூடியவன். சர்வ வல்லமை படைத்தவன் நீ” – – – – – – – – – – – – சுவாமி விவேகானந்தர்.
1897ம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் யாழ்ப்பாணம் வந்தார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சுவாமிஜீக்கு பெரு வரவேற்பு நடந்தது. தொடர்ந்து அவ்வங்கத் துறவியை கொழும்புத்துறைக்கு இரண்டு வெள்ளைக் குதிரைகள் பூட்டிய வண்டியில் வடம்பிடித்து வந்தனர். பெருந்திரளான மக்கள் கணக்கர் சந்தியின் இருமருங்கிலும் காத்திருந்தனர். கணக்கர் சந்தியை அண்மித்ததும் சுவாமி ஜீ வண்டியை விட்டு கூப்பிய கரங்களுடன் இறங்கினார். கொழும்புத்துறைவாழ் சைவப் பெருமக்கள் திருநீறு தரித்த மேனியராய், பூரண கும்ப மரியாதையுடன் வதிரிபீடம் வரை மலர்தூவி வரவேற்றனர். விநாயகப் பெருமான் ஆலயத்தில் சுவாமி ஜீ உரையாற்றும்போது ‘இந்த மண் பாலைவனத்தில் ஒரு பசுந்தரை’ என்று குறிப்பிட்டு இம்மண்ணில் எதிர்காலத்தில் ஞானமார்க்கம் வேரோடி, பெரு விருட்சமாய்ப் பயன்தரும் என்று கூறியது பொய்க்கவில்லை. அவ்வரவேற்பில் வடம் பிடித்த 25 வயது துடிப்பான இளைஞன் சிவயோக சுவாமிகளால் ஞானமார்க்கம் மெய்த்தது எனலாம்.
எல்லாம் வல்ல வதிரிபீட விநாயகர் பொற்பாதங்கள் போற்றி